கடந்த 10 வருடங்களில் 8 பேரை திருமணம் செய்து அவர்களுடைய நகை, பணம் மற்றும் சொத்துக்களை பெண் ஒருவர் சூறையாடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படு...
கடந்த 10 வருடங்களில் 8 பேரை திருமணம் செய்து அவர்களுடைய நகை, பணம் மற்றும் சொத்துக்களை பெண் ஒருவர் சூறையாடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் காவி நகர் பகுதியைச் சேர்ந்த கட்டுமான ஒப்பந்தக்காரர் ஜுகல் கிஷோர் (66), மனைவி மறைந்த பிறகு தனியாக வசித்து வந்தார்.ஒரு வருடத்திற்கு பிறகு ஒரு மேட்ரிமோனியல் விளம்பரத்தைப் பார்த்தார். அதில் மூத்த குடிமகன்கள் மற்றும் விவாகரத்து ஆனவர்களுக்கு சரியான துணை கிடைக்கும் என விளம்பரப்படுத்தி இருந்தனர்.
கிஷோர் அந்த ஏஜென்ஸியைத் தொடர்புகொண்டபோது மோனிகா மாலிக் என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. அந்த பெண்ணை 2019 ஆகஸ்ட் மாதம் கிஷோர் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமாகி சில வாரங்களிலேயே அவரிடம் இருந்த 15 லட்சம் பணம் மற்றும் நகைகளை சுருட்டிக்கொண்டு மோனிகா தலைமறைவாகி விட்டார்.
இதுகுறித்து ஏஜென்ஸியின் உரிமையாளரான மஞ்சு கண்ணாவை தொடர்புகொண்டபோது, இதுபற்றி வெளியே கூறினால் பொய் வழக்குப் பதிவு செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். ஆனால் மோனிகாவின் முந்தைய கணவர்கள் பற்றியும், அவர்களை ஏமாற்றிய விதம் பற்றியும் கிஷோருக்கு பிறகுதான் தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்து அவர் போலீஸில் புகார் அளித்தார்.
விசாரணையில் மோனிகா 10 வருடங்களில் மூத்த குடிமகன்கள் 8 பேரை திருமணம் செய்து, அவர்களிடமிருந்து நகை, பணம் மற்றும் விலைமதிப்பற்ற பல பொருட்களை திருடிச்சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த அனைத்து திருமணமுமே மஞ்சு கண்ணா தலைமையில் நடந்ததால் இது ஒரு மேட்ரிமோனியல் மோசடி என கண்டறியப்பட்டு மஞ்சு கண்ணா மீதும் வழக்குபதிவு செய்துள்ளனர்.
No comments