வேளாண்மை கன்னியாகுமரி மாவட்டத்தில் 'நாஞ்சில் நாட்டில்' மட்டுமே நெல் விளைகிறது. மற்ற இடங்களில் மரவள்ளிக் கிழங்கு, வாழை, சோளம், ...
வேளாண்மை
கன்னியாகுமரி மாவட்டத்தில் 'நாஞ்சில் நாட்டில்' மட்டுமே நெல் விளைகிறது. மற்ற இடங்களில் மரவள்ளிக் கிழங்கு, வாழை, சோளம், உளுந்து, பயறு, பருப்பு ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. நாஞ்சில் நாட்டில், சம்பா, வால் சிறுமுண்டதும் என்ற இருவகை நெல் வகைகள் பாரம்பரியமாக விளைவிக்கப்பட்டு வருகின்றன. நெல்லுக்கு அடுத்து தென்னை 40,000 ஏக்கரில் பயிராகிறது. கன்னியாகுமரி முதல் தேங்காய்ப் பட்டினம் வரை தென்னை வளர்க்கப்படுகிறது. நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் தென்னை நாற்றுப்பண்ணை உள்ளது.
பனைமரம்- கல்குளம், விளவங்கோடு, வட்டங்களில் மிகுந்து காணப்படுகிறது. நுங்கு, பனங்கிழங்கு, பனம்பழம், பதநீர், பனை வெல்லம் போன்றவை பெறப்படுகின்றன. தோவாளை வட்டத்தில் ஆரல்வாய்மொழிப் பகுதியில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. ஊடுபயிராக நீண்ட இழைப் பருத்தி, மலைச்சாரல்களிலும் ரப்பர் தோட்டங்களிலும் பயிராகிறது.
பணப் பயிர்கள்:
அரசாங்க பழ ஆராய்ச்சி நிலையம் பஞ்சலிங்க புரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மா, பலா, கொய்யா, திராட்சை, மாதுளை, எலுமிச்சை, சப்போட்டா ஆகிய நாற்றுகள் வளர்க்கப்பட்டு விற்கப்படுகின்றன. இம்மாவட்டத்தில் விளையும் வாழைப்பழ வகைகளில் ஏற்றம்பழம், மட்டிபழம், தேன் வாழை, செவ்வாழை போன்றவை சிறப்பு மிக்கவை. பொட்டல் பலாபழமும், சூரங்குடி மாம்பழமும் புகழ்பெற்றவை. பருவம் இல்லாத காலங்களில் கூட மாம்பழம் காய்ப்பது இங்கு மட்டும்தான். குழித்துறையில் முந்திரிக்கொட்டை தொழிற்சாலை உள்ளது.
அ) ரப்பர்: தமிழகத்தின் ரப்பர் பால் உற்பத்தியில் கன்னியாகுமரியே முன்னிலை வகிக்கிறது. இங்கு 90 செ.மீ. மழையளவு பெறுவதால் மலேஷிய ரப்பரை விட தரம் உயர்ந்து காணப்படுகிறது. மகேந்திரகிரி, பால்குளம், அசம்புமலை, காரிமணி, பாலமூர், வேளிமலை, முக்கம்பாலா, குதிரைக்குழி, நியூ ஆலம்பாடி முதலிய இடங்களில் பெரும் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. சுமார் 5000 ஏக்கர் பரப்பில் உற்பத்தி நடைபெறுகிறது.
ஆ) தேயிலை: தோவாளை, கல்குளம் வட்டங்களில் 1200 ஏக்கர் பரப்பில் தேயிலை பறிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 3 இலட்சம் கிலோ கருப்புத் தேயிலை கிடைக்கிறது. காப்பி 200 ஏக்கரில் பயிராகிறது.
இ) மிளகு, பாக்கு, புகையிலை: விளவங்கோடு வட்டத்தில் மிளகும், தடிக்காரன் கோணம் மலையடிவாரத்தில் பாக்கும், தோவாளை, அகத்தீஸ்வரம், கல்குளம் வட்டங்களில் ஏராளமான இடங்களில் புகையிலையும் பயிராகின்றன.
No comments