ஆரல்வாய்மொழி அருகே உள்ள மாதவலாயத்தை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவருடைய மகன் முகமது அசாருதீன் (வயது 20). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வெல்டிங் ...
ஆரல்வாய்மொழி அருகே உள்ள மாதவலாயத்தை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவருடைய மகன் முகமது அசாருதீன் (வயது 20). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடன் அதே ஊரை சேர்ந்த நிஷாம் மகன் நசீம் (19), செய்யது மகன் ரியாஸ் (22) உள்பட 7 பேர் வேலை செய்தனர்.
இந்நிலையில் மாதவலாயம் பகுதியில் கைகாட்டி அருகே ஒரு இறைச்சி கடை திறப்பு விழா நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதற்காக நேற்றுமுன்தினம் இரவு கடைக்கு ஷட்டர் போடும் பணியில் முகமது அசாருதீன், நசீம், ரியாஸ் ஆகியோர் மும்முரமாக ஈடுபட்டனர்.
அப்போது முகமது அசாருதீன் தூக்கி பிடித்திருந்த ஷட்டரின் கம்பி எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின் அழுத்த கம்பி மீது உரசியது. இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து அலறினார். உடனே அருகில் நின்ற நசீம், ரியாஸ் ஆகிய 2 பேரும் அவரை காப்பாற்ற முயன்றனர்.
அப்போது அவர்களையும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியதால் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முகமது அசாருதீன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்ற இருவரில் நசீம் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ரியாஸ் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும் இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments