மணவாளக்குறிச்சி அருகே வீட்டில் 50 பவுன் நகையை திருடிய கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:- மணவாள...
மணவாளக்குறிச்சி அருகே வீட்டில் 50 பவுன் நகையை திருடிய கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
மணவாளக்குறிச்சி அருகே உள்ள அழகன்பாறை வசந்தபுரத்தை சேர்ந்தவர் பிரசன்னகுமார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பேபி சுதா (வயது 43). இவரது தாயார் வீடு குளச்சல் அருகே பெத்தேல்புரத்தில் உள்ளது.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி பேபி சுதா வீட்டை பூட்டிவிட்டு சாவியை பக்கத்து வீட்டில் உள்ள உறவினரிடம் கொடுத்துவிட்டு தாய் வீட்டுக்கு சென்றார். மறுநாள் உறவினர், வீட்டை திறந்து பார்த்த போது மாடியில் உள்ள அறைக்கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே பேபி சுதாவுக்கு தகவல் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து பேபி சுதா தனது வீட்டுக்கு வந்து பார்த்த போது, மாடியில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 50½ பவுன் நகைகளை மர்ம ஆசாமி திருடிச்சென்றது தெரிய வந்தது.
இதுபற்றி பேபி சுதா மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். சப் - இன்ஸ்பெக்டர் ஜாண் போஸ்கோ தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நடத்திய தீவிரவிசாரணையில் திருட்டில் ஈடுபட்டது கள்ளக்காதல் ஜோடி என்பதும், அவர்கள் கோவையில் வீடு எடுத்து வசித்து வந்ததும் தெரிய வந்தது. இ்தனைத் தொடர்ந்து போலீசார் கோவைக்கு விரைந்து சென்று கள்ளக்காதல் ஜோடியை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இளம்பெண் பெத்தேல்புரத்தை சேர்ந்த தேவ சுதர் மனைவி டிரைலின் சர்மிலிமோள் (24) என்பதும், அதே பகுதியை சேர்ந்த ஏரோநாட்டிக்கல் என்ஜினீயர் பபின் (27) என்பதும் தெரியவந்தது. இருவரும் கள்ளக்காதல் ஜோடி என்பதும், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து டிரைலின் சர்மிலி மோள் தக்கலை பெண்கள் சிறையிலும், பபின் நாகர்கோவில் மாவட்ட சிறையிலும் அடைக்கப்பட்டனர். இதில் டிரைலின் சர்மிலி மோளின் கணவரின் அக்கா பேபி சுதா வீட்டிலேயே திருட்டை அரங்கேற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments