மணவாளக்குறிச்சி அருகே முட்டத்தில் நடந்த தாய், மகள் கொலையில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருடப்பட்ட நகைகளையும் மீட்டுள்ளனர். பரப...
மணவாளக்குறிச்சி அருகே முட்டத்தில் நடந்த தாய், மகள் கொலையில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருடப்பட்ட நகைகளையும் மீட்டுள்ளனர். பரபரப்பை ஏற்படுத்திய தாய்-மகள் கொலை வழக்கில் மீன்பிடி தொழிலாளி கைது செய்யப்பட்டார். பெண்ணை கேலி செய்ததை தட்டி கேட்டதால், தீர்த்து கட்டியதாக வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.
குமரி மாவட்டம் முட்டம் குழந்தை இயேசு தெருவை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ் (வயது 54). இவரது மனைவி பவுலின் மேரி (வயது 48). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ஆன்றோ சகாயராஜ் மற்றும் அவரது மூத்த மகன் ஆலன் (25) ஆகியோர் துபாயில் ஓட்டலில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகின்றனர். 2-வது மகன் ஆரோன் (21) சென்னையில் பி.இ படித்து வருகிறார்.
பவுலின் மேரிக்கு உதவியாக அவரது தாயார் திரேசம்மாள் (91) உடன் இருந்து வந்தார். பவுலின் மேரி தனது வீட்டின் மாடியில் தையல் பயிற்சி வகுப்பு நடத்தி வந்தார். வீட்டில் பவுலின் மேரியும், அவரது தாயார் திரேசம்மாள் ஆகியோர் மட்டும் இருந்தனர்.
இந்நிலையில் கடந்த 6-ம் தேதி இரவு பவுலின்மேரி மற்றும் அவரது தாயார் திரேசம்மாள் இருவரும் கொலை செய்யப்பட்டு வீட்டில் கிடந்தனர். தலையில் பலமாக தாக்கப்பட்டு இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இந்த கொலை தொடர்பாக வெள்ளிசந்தை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்தனர். குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. எஸ்.பி.ஹரிகிரன் பிரசாத் தினமும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்தார். கொலைக்கான காரணம் என்ன? கொலையாளி யார்? என்ற கோணத்தில் விசாரணை நடந்தது.
பவுலின் மேரி தனது வீட்டு அருகே கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் நடமாடுவதாக புகார் அளித்திருந்தார். எனவே கஞ்சா விற்பனை கும்பல் இந்த கொலையை செய்திருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. இது தொடர்பாக சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் இதில் துப்பு துலங்கவில்லை.
இந்நிலையில் சம்பவ இடத்தில் மங்கி குல்லா கைப்பற்றப்பட்டது. அந்த மங்கி குல்லா தொடர்பாக வீடியோ வெளியிட்டு தகவல் தெரிவிக்கும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்திருந்தனர். பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வந்த நிலையில் மங்கி குல்லா தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில், அதே பகுதியில் வசித்து வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கடியப்பட்டணத்தை சேர்ந்த அமலசுமன் (36) என்பதும், அவர் மீன் பிடி தொழிலுக்கு சென்று வந்ததும் தெரிய வந்தது. தற்போது சூரப்பள்ளம் பகுதியில் வசிப்பதாகவும் கூறினார். அவர்தான், சம்பவத்தன்று வீடு புகுந்து பவுலின் மேரி மற்றும் திரேசம்மாள் ஆகியோரை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விடிய விடிய நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பவுலின் மேரி தனது வீட்டில் தையல் பயிற்சி வகுப்பு நடத்தி வந்தார். இந்த தையல் பயிற்சி வகுப்புக்கு வந்து சென்ற பெண் ஒருவர், அடிக்கடி செல்போனில் பேசியவாறு சென்று வந்ததாக தெரிகிறது. அவரிடம் சென்று இந்த வாலிபர் செல்போன் நம்பரை கேட்டு தகராறு செய்துள்ளார். என்னிடமும் நீ பேச வேண்டும் எனக் கூறி உள்ளார்.
அது தொடர்பாக பபவுலின் மேரி அந்த வாலிபரை கண்டித்துள்ளார். அப்போது பவுலின் மேரி, வயதான தாயாருடன் தனியாக இருக்கும் தகவலை அறிந்த வாலிபர், பின்னர் பவுலின் மேரியை தொந்தரவு செய்து வந்துள்ளார். என்னிடம் நீ செல்போனில் பேச வேண்டும் என்று கூறியுள்ளார். அடிக்கடி பவுலின் மேரியிடம் தகராறு செய்ய தொடங்கினார்.
அவரை பின் தொடர்ந்து சென்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு பவுலின்மேரி வீட்டில் மின்சாரத்தை துண்டித்து விட்டு, கதவை வேகமாக தட்டியுள்ளார். கதவை திறந்து வெளியே வந்ததும், அவரிடம் தகராறு செய்து, கம்பியால் தாக்கியுள்ளார்.
அமலசுமன்
இந்த சத்தம் கேட்டு வயதான தாயார் திரேசம்மாள் வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த அயன்பாக்ஸை எடுத்து அவரையும் தாக்கிவிட்டு தப்பியுள்ளார். இந்த தாக்குதலில் இருவரும் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.
திடீரென மாயாமானால், போலீசார் பிடித்து விடுவார்கள் என்பதால் அந்த பகுதியிலேயே சற்றி வந்துள்ளார். இந்நிலையில் பவுலின் மேரியின் செல்போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்து ஒவ்வொரு எண்ணாக தொடர்பு கொண்டு பேசி வந்தனர். அப்போது தான் தையல் பயிற்சிக்கு வந்த அந்த பெண், கடந்த மாதம் ஒரே நாளில் பலமுறை பவுலின் மேரியிடம் போனில் பேசியது தெரிய வந்தது.
இது தொடர்பாக அந்த பெண்ணிடம் விசாரித்த போது தான் மேற்கண்ட வாலிபர் செய்த தகராறு சம்பவங்களை கூறி உள்ளார். இதையடுத்து நடந்த விசாரணையில் தான் கொலையில் துப்பு துலங்கி உள்ளது. தற்போது பவுலின் மேரி வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளையும் மீட்டுள்ளனர்.
பவுலின் மேரி, திரேசம்மாள் கொலையில் முக்கிய தடயமாக மங்கி குல்லா சிக்கியது. இது தொடர்பாக போலீசார் சமூக வலை தளங்களில் வீடியோ வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் தற்போது கைதாகி உள்ளவர் அடிக்கடி மங்கி குல்லா அணிவது வழக்கம். ஏற்கனவே பவுலின் மேரியிடம் தகராறு செய்து போது இவர் மங்கி குல்லா அணிந்திருந்துள்ளார். அந்த தகவலை தையல் பயிற்சி வகுப்புக்கு வந்த பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதை வைத்து தான் தொடர்ந்து விசாரணையில் கொலையாளி சிக்கியுள்ளார் என தெரிகிறது.
No comments