கணவருடன் சேர்ந்து 8 மாத கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூரை சேர்ந்தவர் பாலமுருகன் (3...
கணவருடன் சேர்ந்து 8 மாத கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூரை சேர்ந்தவர் பாலமுருகன் (31). இவர் திருப்பூர் மாவட்டம் மீனாட்சி நகரில் குடியிருந்து பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும் கவிதா (21) என்பவருக்கும் கடந்த 2½ ஆண்டுக்கு முன்பு பெற்றோர் முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். கவிதா தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இதற்கிடையில் பாலமுருகனின் சகோதரர் கார்த்திகேயன் (35) என்பவரும் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பாலமுருகனை தொடர்பு கொள்ள செல்போனில் அழைத்தார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் பாலமுருகன் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த கார்த்திகேயன் நேற்று காலை பாலமுருகன் வீட்டிற்கு நேரில் சென்றார். அப்போது கதவு சாத்தப்பட்டு இருந்தது.
இதனால் கதவை கார்த்திகேயன் தள்ளினார். அப்போது கதவு திறந்து கொண்டது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, பாலமுருகன் - கவிதா இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் அங்கு வந்த பொலிசார் தூக்கில் தொங்கிய நிலையில் இருவரின் சடலங்களையும் கைப்பற்றினர்.
மேலும் தம்பதி இருவரும் தற்கொலை செய்யும் முன்பு கடிதம் ஏதும் எழுதி வைத்துள்ளார்களா? என்று சோதனை செய்தனர். அப்போது பாலமுருகன் - கவிதா இருவரும் கைப்பட எழுதிய கடிதம் கிடைத்தது.
அதில், எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை. இந்த முடிவை நாங்களே எடுத்துக்கொண்டோம். அம்மா, அப்பா எங்களை மன்னித்து கொள்ளுங்கள். உண்டியல் பணத்தை அண்ணனிடம் கொடுத்து விடுங்கள் என எழுதப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments