வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்யா பீடம் சார்பில் வித்யாஜோதி பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் 42 பேர் பட்டம் பெற்றனர். வெள்ளிமலையை தலைமையிட...
வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்யா பீடம் சார்பில் வித்யாஜோதி பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் 42 பேர் பட்டம் பெற்றனர்.
வெள்ளிமலையை தலைமையிடமாக கொண்டு ஹிந்து தர்ம வித்யா பீடம் செயல்பட்டு வருகிறது. இது இந்துக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் தமிழகம் மற்றும் அண்டைய மாநிலங்களில் சமய வகுப்புகள் நடத்தி வருகிறது.
இவ்வகுப்புகளில் துவக்கநிலை, இளநிலை, வளர்நிலை, உயர்நிலை மற்றும் முதுநிலை ஆகிய ஐந்து நிலைகளில் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

இதில் முதுநிலையில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் வித்யாஜோதி பட்டம் வழங்கி கவுரவிக்கிறது. இந்த வருடம் 31 வது வித்யாஜோதி பட்டமளிப்பு விழா மற்றும் 40 வது சமய வகுப்பு மாணவர் மாநாடு வெள்ளிமலை ஸ்ரீவிவேகானந்த ஆஸ்ரமம் சுவாமி மதுரானந்தர் மணிமண்டபத்தில் நேற்று நடந்தது. காலை 8 மணிக்கு வெள்ளிமலை ஸ்ரீராமகிருஷ்ணர் கோயிலில் துறவியர் மற்றும் பெரியோர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கோயில் தரிசனம், வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கிரிவலம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மாநாட்டு பந்தலில் கோவை ஸ்ரீராமகிருஷ்ண ஆஸ்ரம தலைவர் கேசவானந்த மகராஜ் காவிக்கொடி ஏற்றினார். விஜயகுமார் ஆஸ்பத்திரி டாக்டர் ராம்சந்தர் தேசிய கொடி ஏற்றினார். வித்யாஜோதிகள் தங்கள் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்தனர். நெட்டாங்கோடு ஸ்ரீசாரதேஸ்வரி ஆஸ்ரம தலைவர் ஸ்ரீயோகேஸ்வரி மீராபுரி மாதா பட்டமளிப்பு வேள்வியை நடத்தினார்.
தக்கலை பாரம்பரிய வைத்தியர் மகேஸ்வரி துரைசாமி திருவிளக்கு ஏற்றினார். சமய வகுப்பு மாணவி கோபிஷா இறைவணக்கம் பாடினார். ஹிந்து தர்ம வித்யா பீட அமைப்புச் செயலாளர் சிவாத்மானந்த மகராஜ் அறிக்கை வாசித்தார். தேர்வுகுழு ஆணையர் ஜெயா ராமச்சந்திரன் உறுதிமொழி வாசித்தார். மாவட்ட அமைப்பாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். ஹிந்து தர்ம வித்யாபீட தலைவர் சைதன்யானந்த மகராஜ் வித்யாஜோதி பட்டமும், கேடயமும் வழங்கினார். கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர துணைத்தலைவர் நிவேதிதாபிடே பட்டமளிப்பு உரையாற்றினார்.

கரூர் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் சந்திர சேகரானந்த மகராஜ் ஆசியுரை நிகழ்த்தினார். விவேகானந்த கேந்திரம் கிருஷ்ணமூர்த்தி வாழ்த்துரையாற்றினார். குருந்தன்கோடு ஒன்றிய அமைப்பாளர் மனோகரன் நன்றி கூறினார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஜி.வி. இஞ்சினீயர்ஸ் உரிமையாளர் ராஜன் கணநாதர் மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியர் பொன்னுலிங்கம் ஆகியோர் பரிசுகள் வழங்கினார்.
விழாவில் நூற்றுக்கணக்கான சமய வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், துறவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments