உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள பா.ஜ., அரசில், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த டேனிஷ் ஆசாத் அன்சாரி, சிறுபான்மையினர் நலத் துறை இணையமைச்சராக நியமிக்க...
உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள பா.ஜ., அரசில், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த டேனிஷ் ஆசாத் அன்சாரி, சிறுபான்மையினர் நலத் துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், உத்தர பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ., அரசு அமைந்துள்ளது. முதல்வராக யோகி ஆதித்யநாத் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்றார். அவருடன், 52 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
இவர்களில் ஒரே முஸ்லிம் அமைச்சராக, டேனிஷ் அன்சாரி, 32, நியமிக்கப்பட்டுள்ளார். சட்டசபை மற்றும் சட்ட மேலவை உறுப்பினராக இல்லாத நிலையில், இவர் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:-
இந்த நியமனம் மதத்துக்கு அப்பாற்பட்டது. அடிமட்ட தொண்டனின் உழைப்புக்கு கிடைத்து உள்ள அங்கீகாரம் இது. இதற்காக பா.ஜ., தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது, மத அடிப்படையில் அரசியல் செய்யும் சமாஜ்வாதி, காங்கிரஸ் தலைவர்களின் முகத்தில் விடுக்கப்பட்ட அறையாகும். பா.ஜ., எந்த திட்டத்தையும் ஜாதி, மதத்தின் அடிப்படையில் பிரித்து செயல்படுத்துவதில்லை.
அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை கிடைக்கும் வகையிலான திட்டங்களையே பா.ஜ., செயல்படுத்தி வருகிறது. முஸ்லிம்களுக்கு பா.ஜ., மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments