புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்குப் பலனளிக்கும் என்று பிரதமர் நர...
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்குப் பலனளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் ஆண்டுவிழாவில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியது:
"வேளாண் சட்டங்களிலுள்ள தடுப்புகளை அகற்றவே சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய சட்டங்கள் வேளாண் துறையில் தொழில்நுட்பத்தையும், முதலீட்டையும் கொண்டு வரும். கொள்கைகள் மூலம் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவே அரசு உறுதி பூண்டுள்ளது. அரசு மேற்கொள்ளும் அனைத்து சீர்திருத்தங்களின் நோக்கமும் விவசாயிகளை வளமிக்கவர்களாக ஆக்குவது.
விவசாயிகள், மண்டிகள் மட்டுமில்லாமல் வெளி நபர்களிடமும் விற்பனை செய்வதற்கான வாய்ப்பு தற்போது உள்ளது. மண்டிகள் நவீனமயப்படுத்தப்பட்டதையடுத்து, விவசாயிகள் பொருள்களை வாங்குவதற்கும், விற்பதற்கும் டிஜிட்டல் தளங்கள் உள்ளன. விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கத்திலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் விவசாயிகள் வளமிக்கவர்களானால் நாடும் வளமாகும்.
புதிய சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டால், விவசாயிகளுக்கு புதிய சந்தைகளும் வாய்ப்புகளும் உருவாகும். தொழில்நுட்பத்தின் உதவியும் அவர்களுக்கு கிடைக்கும்.
இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டு வேளாண் துறையில் அதிக முதலீடு கிடைக்கும். சிறிய நிலங்களைக் கொண்டு விவசாயம் செய்து வரும் சிறு மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளே இந்த சீர்திருத்தங்களின் அதிக பலனை அனுபவிப்பார்கள். கடந்த காலங்களைவிட வேளாண் துறை தற்போது மிகவும் துடிப்பாக உள்ளது."
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான பேச்சுவார்த்தைகளில் முடிவுகள் எட்டப்படவில்லை. புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.
No comments