உகாண்டா ஜனாதிபதி , உகாண்டா ராணுவ தலைமை தளபதி மற்றும் இந்திய ராணுவ தளபதிகளால் கவுரவிக்கப்பட்ட உகாண்டா மண்டல த.மு.மு.க தலைவர் முகம்மது வாகித...
உகாண்டா ஜனாதிபதி , உகாண்டா ராணுவ தலைமை தளபதி மற்றும் இந்திய ராணுவ தளபதிகளால் கவுரவிக்கப்பட்ட உகாண்டா மண்டல த.மு.மு.க தலைவர் முகம்மது வாகித். இவர் கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயம் ஊரை சேர்ந்தவர்.

உகாண்டாவில் ஜின்ஜா நகரில் கிமாகா எனும் இடத்தில் ராணுவத்தின் மூத்த அதிகாரிகளுக்கான பயிற்சிகூடம் உள்ளது. இங்கு உகாண்டா, ருவாண்டா, தன்சானியா, சூடான், புரூண்டி மற்றும் சவுத் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் தலைமை அதிகாரிகள் ராணுவ பயிற்சி பெற்றுவருகிறார்கள். ஆரம்பத்தில் இந்த பயிற்சி கூடம் அமெரிக்க ராணுவத்தால் நடத்தப்பட்டு வந்தது.
பின்பு 2016 ஆம் ஆண்டு முதல் இந்த பயிற்சி கூடத்தின் பயிற்சி பொறுப்பு இந்திய ராணுவத்தின் வசம் பயிற்சி பெறும் நாடுகளால் ஒப்படைக்கப்பட்டது. இந்த பயிற்சிக்கூடத்தில் பயிற்றுவிக்க இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் நால்வர் இந்திய ராணுவத்தால் நியமிக்கப்பட்டனர். பிரிகேடியர் ஜெனரல் ரஞ்சித்சிங் தலைமை தளபதியாகவும் கர்னல் அமீத் சுனேஜா , கர்னல் ராஜேஷ் நம்பியார் மற்றும் குரூப் கேப்டன் மனீஷ் ஆகியோர் துணை தளபதிகளாகவும் நியமிக்கப்பட்டு 100 கும் மேற்பட்ட 7 நாடுகளை சார்ந்த ராணுவ உயரதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடை பெற்ற ராணுவ அதிகாரிகள் பதக்கம் பெறும் விழாவிற்கு பார்வையாளர்களாக உகாண்டா இந்தியன் அசோசியேசன் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த விழாவில் பேசிய பிரிகேடியர் ஜெனரல் ரஞ்சித் சிங் இந்தியாவில் புனேவில் செயல்படும் தேசிய பாதுகாப்பு பயிற்சியகம் (National Defense Academy) Sudan Block என அழைக்கப்படுவதாகவும் இது இரண்டாம் உலகப்போரில் இந்திய ராணுவம் சூடானில் செய்த சாகசங்களுக்காக அன்றைய சூடான் அரசால் இந்தியாவில் கட்டிக்கொடுக்கப்பட்டது என்ற தகவலை தெரிவித்தார் .
இந்த தகவலை உள்வாங்கிய இந்திய அசோசியன் நிர்வாகம் இது போல ஒரு பயிற்சி கூடத்தை இந்தியா பிளாக் எனும் பெயரில் நாமும் ஏற்படுத்தி கொடுப்பதன்மூலம் இந்தியாவின் புகழ் மற்றும் நட்பு இங்கு பயிற்சி பெறும் 7 நாடுகளிலும் அதிகரிக்கும் என்ற முடிவினை இந்திய தூதரகம் மூலம் தெரியப்படுத்தினர்.
2019 ஜூன் 19 அன்று நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய உகாண்டா இந்திய அசோசியன் பொதுச்செயலாளரும் , தமிழ் சங்கம் உகாண்டாவின் டிரஸ்டியும் , த.மு.மு.க தமிழ்நாடு மாநில ஊடகப்பிரிவு பொறுப்பாளரும் உகாண்டா மண்டல த.மு.மு.க தலைவருமாகிய சகோதரர் வாகித் அவர்கள் இந்த பயிற்சி கூடத்தை இந்திய அரசு சார்பாக இங்கிருக்கும் உகாண்டா இந்தியன் அசோசியன் 1 பில்லியன் உகாண்டா சில்லிங் செலவில் ஓராண்டுக்குள் கட்டி முடித்து ஒப்படைப்போம் என்றும் இந்த புராஜக்ட்டை தானே முன்னின்று நடத்தி தருவேன் என்றும் வாக்களித்தார்.
வாக்களித்தபடியே ஓராண்டுக்குள் 1 பில்லியன் செலவில் கட்டி முடிக்கப்பட்டு மே 23 ,2020 அன்று உகாண்டா பிரசிடெண்ட் ஜெனரல் யொவேரி ககுட்டா முசவேனி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இந்தியன் அசோசியன் பொதுச்செயலாளர் வாகித் அவர்களின் பங்களிப்பை பாராட்டி உகாண்டா ஜனாதிபதியின் பாராட்டு பதக்கம் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் டேவிட் முஹூசி அவர்களால் வழங்கப்பட்டது.
அதுபோல 7 ஜூன் 2020 அன்று இந்திய ராணுவத்தின் சார்பாக நடந்த பாராட்டு விழாவில் இந்திய ராணுவ தளபதி பிரிகேடியர் ஜெனரல் ரஞ்சித் சிங் அவர்கள் சகோதரர் வாகித் அவர்களின் தன்னம்பிக்கை ,முடிவுகள் எடுப்பதில் உள்ள திடம், பரந்துபட்ட ஆலோசனை திறன் ஆகியவற்றை புகழ்ந்ததோடு இந்திய ராணுவம் சார்பாக அவரது திறமையை பாராட்டி அவர் பெயர் பொறிக்கப்பட்ட ராணுவ தொப்பி மற்றும் இந்திய ராணுவ பயிற்சிக்கூடத்தின் பதக்கம் ஆகியவற்றை வழங்கி கவுரவித்தார்.
No comments