ஜூன் 1-ம் தேதி முதல் ரெயில்கள் ஓடும் என்றும், தினசரி 200 ரெயில்கள் இயக்கப்படும் என்றும் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் அறிவித்து உள்ளார். ...
ஜூன் 1-ம் தேதி முதல் ரெயில்கள் ஓடும் என்றும், தினசரி 200 ரெயில்கள் இயக்கப்படும் என்றும் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் அறிவித்து உள்ளார்.

கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. சரக்கு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக கடந்த 1-ம் தேதி முதல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ‘ஷர்மிக்’ சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுதவிர டெல்லியில் இருந்து மும்பை, ஆமதாபாத், பெங்களூரு உள்ளிட்ட 15 நகரங்களுக்கு சமீபத்தில் சிறப்பு ரெயில்கள் விடப்பட்டு இருக்கின்றன. இதற்கிடையே, வழக்கமாக ரெயில்களில் பயணம் செய்வதற்காக வருகிற ஜூன் மாதம் 30-ம் தேதி வரை முன்பதிவு செய்து இருந்த டிக்கெட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், கட்டணத்தின் முழு தொகையும் பயணிகளுக்கு திருப்பி வழங்கப்படும் என்றும் சில தினங்களுக்கு முன் ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில், ஜூன் 1-ம் தேதி முதல் ரெயில்களை வழக்கமான அட்டவணையின்படி இயக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் நேற்று தனது ‘டுவிட்டர்’ பதிவின் மூலம் தெரிவித்து உள்ளார்.
இந்திய ரெயில்வே ஜூன் 1-ம் தேதி முதல் வழக்கமான அட்டவணையின்படி ஏ.சி. (குளிர்சாதன வசதி) அல்லாத 200 ரெயில்களை தினசரி இயக்க இருப்பதாகவும், இந்த ரெயில்களில் அனைத்து பெட்டிகளும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளாக இருக்கும் என்றும் அதில் அவர் கூறியுள்ளார்.
இந்த ரெயில்களில் பயணம் செய்ய ஆல்லைன் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்றும், யார் வேண்டுமானாலும் முன்பதிவு செய்யலாம் என்றும், முன்பதிவு விரைவில் தொடங்கும் என்றும் அவர் தனது ‘டுவிட்டர்’ பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
எந்த வழித்தடங்களில் இந்த ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே தரப்பில் அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை, என்றாலும் நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களுக்கு இடையே இந்த ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறப்பு ரெயிலில் செல்ல முடியாத புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இந்த ரெயில்கள் உதவியாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
No comments