திருவட்டாரில் மாயமான என்ஜினீயரிங் மாணவர் குளச்சல் கடலில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என கடலோர பாதுகாப்பு குழும போலீ...
திருவட்டாரில் மாயமான என்ஜினீயரிங் மாணவர் குளச்சல் கடலில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவட்டார் அருகே உள்ள கொல்வேல் பகுதியை சேர்ந்தவர் ஹரிலால் மூர்த்தி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் மிதுன் ஹரிலால் (வயது 22). இவர், கோயம்புத்தூரில் ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா பரவல் காரணமாக ஊர் திரும்பிய மிதுன் ஹரிலால் அதன்பிறகு வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் பாடங்களை படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 7-ம் தேதி மதியம் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே கிளம்பிய மிதுன் ஹரிலால் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
பின்னர், இதுபற்றி திருவட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் மிதுன் ஹரிலாலை தேடி வந்தனர்.
இந்நிலையில் குளச்சல் துறைமுக பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிள் கேட்பாரற்று நின்றது. இதைகண்ட அந்த பகுதி மக்கள் இதுபற்றி குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து மோட்டார் சைக்கிளை கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்த மோட்டார் சைக்கிள் திருவட்டார் கொல்வேல் பகுதியை சேர்ந்த மிதுன் ஹரிலாலினுடையது என்பதும் அவர் மாயமானதாக திருவட்டார் போலீஸ் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் உள்ளூர் மீனவர்கள் கடற்பகுதியில் தேடினர். இதற்கிடையே தகவல் அறிந்து மாணவரின் உறவினர்களும் அங்கு வந்தனர்.
இந்நிலையில் குளச்சல் சிங்காரவேலர் காலனி கடற்கரையில் அலை தடுப்பு சுவர் பகுதியில் மிதுன் ஹரிலாலின் செருப்பு கிடப்பதை கண்டனர். மேலும், மாணவரின் உடல் அலை தடுப்பு சுவர் கற்களுக்கு இடையே சிக்கியிருப்பதும் தெரிந்தது.
இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் கிங்சிலி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அந்த பகுதி மீனவர்கள் உதவியுடன் சுமார் 3 மணிநேரம் போராடி மாணவர் மிதுன் ஹரிலாலின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது, அங்கு நின்ற உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.
பின்னர், மிதுன் ஹரிலாலின் உடல் பிரேத பிரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் மிதுன் ஹரிலால் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments