குளச்சல் அருகே குறும்பனை பகுதியிலிருந்து கேரளத்துக்கு காரில் கடத்த முயன்ற சுமாா் 2 டன் ரேஷன் அரிசி மற்றும் அப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டி...
குளச்சல் அருகே குறும்பனை பகுதியிலிருந்து கேரளத்துக்கு காரில் கடத்த முயன்ற சுமாா் 2 டன் ரேஷன் அரிசி மற்றும் அப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெயை போலீஸாா் நேற்று பறிமுதல் செய்தனா்.

குளச்சல் காவல் உதவி ஆய்வாளா் ஜாண் போஸ்கோ தலைமையிலான போலீஸாா், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, குறும்பனை அருகே ஒரு காரில் பிளாஸ்டிக் பைகளை ஏற்றிகொண்டிருந்ததை கண்ட அவா்கள், அருகே சென்றதும் காா் ஓட்டுநரும், மற்றொருவரும் தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பிளாஸ்டிக் பைகளை போலீஸாா் சோதனை செய்த போது, அதில், ரேஷன் அரிசியை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து சுமாா் 2 டன் ரேஷன் அரிசி மற்றும் காரை போலீஸாா் பறிமுதல் செய்து குளச்சல் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனா்.
காரின் நம்பரை ஆய்வு செய்த போது, அது இருசக்கர வாகனத்தின் நம்பரை போலியாக பயன்படுத்தியிருந்தது தெரிய வந்தது. இது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மேலும், அப்பகுதியில் போலீஸாா் ரோந்து சென்ற போது ஒரு தோப்பு பகுதியில் 120 கேன்களில் 6 ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெய் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதற்கு உரிமை கோரி யாரும் வராததால், மண்ணெண்ணெயை டெம்போவில் ஏற்றி போலீஸாா் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனா். பின்னா் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் அரிசி, 6 ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெய் ஆகியவற்றை நாகா்கோவில் கோணம் பகுதியில் உள்ள கிடங்கில் ஒப்படைத்தனா்.
No comments