திங்கள்சந்தை பகுதியில் கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர் கண்முன் வாலிபர் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில்...
திங்கள்சந்தை பகுதியில் கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர் கண்முன் வாலிபர் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே இரணியல் ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் ஜான். இவரது மகன் சுஜித் (வயது28), திருமணம் ஆகாதவர். இவர் திங்கள்சந்தையில் உள்ள மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வந்தார். மேலும் கேட்டரிங் சர்வீஸ் வேலைக்கும் செல்வது வழக்கம்.
நேற்று மாலை சுஜித் தனது நண்பர் ஸ்டெபினுடன் மோட்டார் சைக்கிளில் திங்கள்சந்தை பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் மாங்குழி பகுதிக்கு வருமாறு கூறியதாக தெரிகிறது. உடனே, சுஜித் தனது நண்பரிடம் மாங்குழி வரை சென்று விட்டு வருவோம் என்று கூறினார். இதையடுத்து இருவரும் மோட்டார் சைக்கிளில் மாங்குழி நோக்கி சென்றனர்.
மாங்குழி குளத்தங்கரையில் சென்றபோது திங்கள்சந்தை அருகே பெரியபள்ளி என்ற இடத்தை சேர்ந்த சுரேஷ் (42) மற்றும் அவரது நண்பர் ராபி ஆகியோர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினர். இதனால், சுஜித் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி ‘ஏன் எங்களை தடுத்து நிறுத்தினீர்கள்’ என கேட்டார். அத்துடன் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ராபி, சுஜித்தை பின்பக்கமாக பிடித்து கொண்டார். உடனே, சுரேஷ் தனது கையில் இருந்த கத்தியால் சுஜித்தின் மார்பு, கை, வயிறு போன்ற பகுதிகளில் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த சுஜித் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
இதற்கிடையே சுஜித்துடன் சென்ற நண்பர் ஸ்டெபின் அவர்களை தடுக்க முயன்றார். ஆனால் கொலையாளிகள் அவரை கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பி சென்றனர். தனது கண்முன் நண்பர் கொலை செய்யப்பட்டதை கண்டு ஸ்டெபின் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து இரணியல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. சுஜித் மற்றும் சுரேஷ் ஆகியோர் வாடிவிளை பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்ததாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சினையால் கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற கொலையாளிகளை தேடி வருகிறார்கள். கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments