நாகர்கோவில் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சுரேஷ் ராஜன் நேற்று முன்தினம் மாலை பார்வதிபுரம் சந்திப்பில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார...
நாகர்கோவில் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சுரேஷ் ராஜன் நேற்று முன்தினம் மாலை பார்வதிபுரம் சந்திப்பில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

நேற்று காலை வாத்தியார் விளை, சரக்கல் விளை, கண்ணங்குளம், வேதநகர், சின்ன வன்னான்விளை, என்.ஜி.ஓ. காலனி, இருளப்பபுரம், வட்டவிளை பகுதிகளில் வீடு வீடாகச் சென்றும், திறந்த ஜீப்பில் சென்றும் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த சட்டமன்ற தேர்தலில் எனக்கு வாக்களித்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தீர்கள். எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்பதால் தொகுதியில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அ.தி.மு.க. அரசு முட்டுக்கட்டையாக இருந்தது. இருப்பினும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன்.
அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறையிலும் ஊழல் நடந்துள்ளது. மக்கள் இந்த ஆட்சியை தூக்கி எறிய வேண்டும். நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெறும். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமையும்.
நாகர்கோவில் தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் நிறைவேற்றுவேன். உங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்க உங்களில் ஒருவனாக இருந்து செயல்படுவேன். முதியோர் உதவித்தொகை, விதவைகள் ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.
நாகர்கோவில் நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடித்து சாலையை சீரமைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். குடிநீர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments