அகில பாரத இந்து மகாசபா மாநில நிர்வாகிகள் கூட்டமும், இந்துத்துவ அரசியல் விழிப்புணர்வு கூட்டம் தக்கலை பேலஸ் ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்...
அகில பாரத இந்து மகாசபா மாநில நிர்வாகிகள் கூட்டமும், இந்துத்துவ அரசியல் விழிப்புணர்வு கூட்டம் தக்கலை பேலஸ் ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவரும், தேசிய துணை தலைவருமான பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

கர்நாடகா மாநில தலைவர் சுரானா, கேரள மாநில தலைவர் சத்யசாய் சொரூபநாத், மாநில பொதுச்செயலாளர்கள் முத்தப்பா, பொன்வெற்றி வேலாயுதபெருமாள், செந்தில், மாநில துணை தலைவர்கள் செந்தில்குமார், புருசோத்தமன், சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பிறகு மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் காவி புரட்சியை உருவாக்க வேண்டும் என்பது இந்து மகாசபா நோக்கம். வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும், பாண்டிசேரியில் 30 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம்.
தமிழகத்தில் இந்துக்களை தட்டி எழுப்பக்கூடிய இந்துத்துவ அரசியல் விழிப்புணர்வு யாத்திரை தொடங்கி விட்டது. இந்துக்கள் அதிகமாக இருக்கும் கட்சி பா.ஜனதா. இந்தியா முழுவதும் வளர்ந்து விட்டாலும், தமிழகத்தில் அதற்கான எந்த அடித்தளமும் இல்லை. தமிழகத்தில் எங்களோடு கூட்டணி சேர தயாரான நிலையில் இந்து மகாசபா அவர்களுடன் துணை நிற்கும்.
குமரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான களம் அமைத்து அதற்கான பணிகள் நடந்து வருகிறது. விவசாயிகள் போராட்டத்துக்கு எங்களது ஆதரவு கிடையாது. எடப்பாடி பழனிசாமி மிகவும் நல்ல மனிதர். அ.தி.மு.க. இந்துக்களுக்கு விரோதியான கட்சி அல்ல.
இந்துக்கள் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்ட பொங்கல் பரிசு ரூ.2 ஆயிரத்து 500 கொடுத்ததும்,, தைப்பூச திருநாளன்று அரசு விடுமுறை அளித்ததற்காகவும் முதல்- அமைச்சரை பாராட்டுகிறோம். கொரோனா தடுப்பு மருந்தை அரசு இலவசமாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments