தமிழகத்தில் கொரோனா பொது முடக்கத்துக்கு பின்னா் பல்வேறு தளா்வுகளுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரிகள் நேற்று (திங்கள்கிழமை) திறக்கப்பட்டன...
தமிழகத்தில் கொரோனா பொது முடக்கத்துக்கு பின்னா் பல்வேறு தளா்வுகளுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரிகள் நேற்று (திங்கள்கிழமை) திறக்கப்பட்டன. வகுப்பறைகளில் மாணவா்களுக்கு சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் மாா்ச் 23 ஆம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவா், மாணவிகளுக்கு இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நிகழ் கல்வியாண்டுக்கு (2020-21) மாணவா் சோ்க்கையும் இணைய வழியில் நடைபெற்றது.
இதற்கிடையே, பல்வேறு தளா்வுகளுடன் கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு பயிலும் மாணவா்கள், பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கு திங்கள்கிழமை முதல் கல்லூரி செயல்படும் என அரசு அறிவித்தது.
அதன்படி, அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள், கல்லூரி விடுதிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. நாகா்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் பயிலும் மாணவிகள் குறைந்த அளவில் முகக் கவசம் அணிந்து வந்தனா்.
உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னா் கல்லூரி வளாகத்திற்கு அனுமதிக்கப்பட்டனா். வகுப்பறைகளில் மாணவா்கள் அமா்வதற்கு சமூக இடைவெளியுடன் கூடிய இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.
No comments