பெங்களூரு வில்சன் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் ராகினி(வயது 40). இவர் அனுமந்தநகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்து உள...
பெங்களூரு வில்சன் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் ராகினி(வயது 40). இவர் அனுமந்தநகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்து உள்ளார்.

இந்த நிலையில் தனது வங்கிக்கணக்கு உள்ள பண கையிருப்பு பற்றி அறிய ராகினி விரும்பினார். இதற்காக அவர் ஆன்-லைன் மூலம் வாடிக்கையாளர் மையத்தை தொடர்பு கொள்வதற்காக இணையதளத்தில் செல்போன் எண்ணை தேடினார்.
அப்போது இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த ஒரு செல்போன் எண்ணுக்கு ராகினி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர் சில தொழில்நுட்ப பிரச்சினை இருப்பதால் உங்களது பண கையிருப்பு பற்றி அறிய முடியவில்லை என்று கூறியுள்ளார். இதனால் ராகினி செல்போன் இணைப்பை துண்டித்து உள்ளார்.
இந்நிலையில் ராகினியின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் எதிர்முனையில் பேசிய நபர் ராகினியிடம் நான் நீங்கள் வங்கிக்கணக்கு வைத்து உள்ள வங்கியின் நிர்வாக பிரிவில் இருந்து பேசுகிறேன். உங்களது வங்கிக்கணக்கு எண், ஏ.டி.எம்.கார்டு நம்பரை கொடுத்தால் உங்களிடம் உள்ள பண கையிருப்பு பற்றி சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதனை நம்பிய ராகினியியும் அந்த நபர் கேட்டபடி வங்கிக்கணக்கு எண், ஏ.டி.எம்.கார்டு நம்பரை கொடுத்தார். இந்த நிலையில் ராகினியின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.4 லட்சத்து 3 ஆயிரத்து 700 எடுக்கப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராகினி வங்கிக்கு சென்று கேட்டு உள்ளார். அப்போது வங்கியில் இருந்து யாரும் தன்னிடம் பேசவில்லை என்று ராகினிக்கு தெரியவந்தது. இதனால் மர்மநபர் தன்னை ஏமாற்றி ரூ.4 லட்சத்தை அபேஸ் செய்தது ராகினிக்கு தெரிந்தது. இதுகுறித்து அவர் வில்சன் கார்டன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments