குடும்பத் தகராறு காரணமாக திருமணமான 9 மாதத்தில் புதுமணப்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் ம...
குடும்பத் தகராறு காரணமாக திருமணமான 9 மாதத்தில் புதுமணப்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான யுவராஜூக்கும் (22), அவரது முறைப்பெண் சுப்புலட்சுமிக்கும் (19) 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
யுவராஜூக்கு குடிப்பழக்கம் இருந்ததால் திருமணம் ஆனதில் இருந்தே இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற யுவராஜ் மாலை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதை தட்டிக்கேட்ட சுப்புலட்சுமிக்கும் அவருக்கும் சண்டை ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த யுவராஜ், இரும்பு ஊதுகுழலை எடுத்து சுப்புலட்சுமியின் தலை, நெற்றியில் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம், பக்கத்தினர் உடனடியாக மீட்டு, பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி சுப்புலட்சுமி உயிரிழந்தார். இதுகுறித்து சுப்புலட்சுமியின் தந்தை ராமமூர்த்தி, போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து யுவராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த சுப்புலட்சுமிக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் இதுதொடர்பாக ஆர்.டி.ஓ பார்த்திபன் விசாரணை நடத்த உள்ளார்.
No comments