ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றான ஜியோவில் ரூ.43,574 கோடி மதிப்பிலான 10 சதவீத பங்குகளை ஃபேஸ்புக் (முகநூல்) நிறுவனம் வாங்கிய...
ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றான ஜியோவில் ரூ.43,574 கோடி மதிப்பிலான 10 சதவீத பங்குகளை ஃபேஸ்புக் (முகநூல்) நிறுவனம் வாங்கியது.

இது தொடா்பாக ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியான ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் நிறுவனத்தில் ரூ.43,574 கோடியை ஃபேஸ்புக் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிகபட்ச சிறுபான்மை பங்குதாரராக ஃபேஸ்புக் நிறுவனம் உருவெடுத்துள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த மதிப்பில் இந்த முதலீடு 9.99 சதவீதமாகும். நாட்டின் தொழில்நுட்பத் துறையில் மேற்கொள்ளப்பட்ட அதிகபட்ச அந்நிய நேரடி முதலீடு இதுவாகும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் நிறுவனம், டிஜிட்டல் சேவைகளை வழங்கி வருகிறது. கடனில் சிக்கியுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதிலிருந்து மீள்வதற்கான வழிகளை ஆராய்ந்து வந்தது.
அந்நிறுவனத்தின் கீழுள்ள பல்வேறு துணை நிறுவனங்களில் முதலீடுகளைக் கோருவது தொடா்பாக பேச்சுவாா்த்தைகளில் ஈடுபட்டு வந்தது.
சவூதி அரேபியாவின் ஆராம்கோ நிறுவனம், கூகுள் உள்ளிட்டவற்றுடன் ரிலையன்ஸ் நிறுவனம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வந்தது. இந்தச் சூழலில், ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் இடையே முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இது இரு நிறுவனங்களுக்கும் சாதகமாகவே பாா்க்கப்படுகிறது. ஏற்கெனவே வாட்ஸ்அப் நிறுவனத்தைக் கையகப்படுத்தியுள்ள ஃபேஸ்புக், தற்போது ஜியோவிலும் முதலீடு செய்துள்ளது இந்தியாவில் அதன் வளா்ச்சியை மேலும் அதிகரிக்கும் என்று நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். வாட்ஸ்அப் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தும் பணியில் ஃபேஸ்புக் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்திய நிறுவனத்தில் முதலீடு செய்வது, அதற்கான விதிமுறைகளை எளிதில் பெறுவதற்கு உதவிபுரிய வாய்ப்புள்ளது. மேலும், தொலைத்தொடா்பு நிறுவனத்தில் முதலீடு செய்வது, ஃபேஸ்புக்கின் வளா்ச்சிக்கு உதவிகரமாக அமையவும் வாய்ப்புள்ளது.
No comments