மார்த்தாண்டம் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தி சென்று குடும்பம் நடத்திய பெயிண்டரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மார்த்தாண்டம் அ...
மார்த்தாண்டம் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தி சென்று குடும்பம் நடத்திய பெயிண்டரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
மார்த்தாண்டம் அருகே உள்ள பேரை பகுதியை சேர்ந்த ஒரு மாணவி ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். மாணவியின் தாயார் நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 25-ம் தேதி இரவில் மாணவியின் தாயார் வேலை முடித்து வீட்டுக்கு சென்ற போது மாணவியை காணவில்லை. அவரை தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து மாணவியை யாரோ கடத்தி சென்றுள்ளதாக தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை சப்-இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அந்த மாணவி ஒரு வாலிபருடன் நாகப்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து அவர்கள் அங்கு சென்று அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் இருந்து மாணவியை மீட்டனர்.
பின்னர் அவர்களை மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் தக்கலை அருகே உள்ள முட்டைக்காடு சரல்விளை பகுதியை சேர்ந்த அஜித் (வயது 28) என்பது தெரியவந்தது. இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு பேரை பகுதியில் உறவினர்கள் உள்ளனர். அவர்களிடம் போனில் தொடர்பு கொண்டபோது மாணவியின் செல்போனுக்கு அழைப்பு சென்றுள்ளது. அதன்பின்பு, மாணவியுடன் அஜின் தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் அந்த மாணவியை கடத்தி சென்று நாகப்பட்டினம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்தது.
அதை தொடர்ந்து அஜின் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மீட்கப்பட்ட மாணவி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments