மணக்குடி கடலில் குளிக்க சென்ற 6 பேரை ராட்சத அலை இழுத்து சென்றது. அதில் 5 பேர் உயிர் தப்பி கரை திரும்பினார்கள். ஆனால் மாணவர் ஒருவரை மட்டும் க...
மணக்குடி கடலில் குளிக்க சென்ற 6 பேரை ராட்சத அலை இழுத்து சென்றது. அதில் 5 பேர் உயிர் தப்பி கரை திரும்பினார்கள். ஆனால் மாணவர் ஒருவரை மட்டும் காணவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த சம்பவம் பற்றி போலீசில் கூறியதாவது:-
நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்த வீரபுத்திரன் மகன் மணிகண்டன் (வயது 18). இவர் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இ.சி. பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
மணிகண்டன் தன்னுடைய பள்ளிப்பருவ நண்பர்களான மீனாட்சிபுரம் சுதர்சிங் (17), வடிவீஸ்வரம் நடராஜன் (17), பீச்ரோடு பகுதியை சேர்ந்த விஷ்ணுகுமார் (18), சுதன் (17), செட்டிகுளம் சுரேஷ்குமார் (17) ஆகியோருடன் நேற்று மாலை 4.30 மணி அளவில் மணக்குடியில் உள்ள தூண்டில் வளைவு பகுதிக்கு சென்றார். அங்கு 6 பேரும் கடலில் இறங்கி ஆனந்தமாக குளித்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று ஒரு ராட்சத அலை வந்தது. அது கண் இமைக்கும் நேரத்தில் 6 பேரையும் கடலுக்குள் இழுத்து சென்றது.
அந்த பகுதி தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு இருந்ததால், கற்களை பிடித்து ஒருவர் பின் ஒருவராக கரைக்கு திரும்பினார்கள். 5 பேர் உயிர் தப்பி கரைக்கு வந்தனர். ஆனால் மணிகண்டனை மட்டும் காணவில்லை. அப்போது தான் அவரை அலை இழுத்து சென்றது தெரிய வந்தது.
உடனே உயிர் தப்பி வந்த 5 பேரும் நண்பரை காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டு கதறி அழுதனர். உடனே உள்ளூர் மீனவர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் படகு மற்றும் வள்ளம் மூலம் மணிகண்டனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும், சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் சுடர் மாதவன் மற்றும் கன்னியாகுமரி, குளச்சல் கடலோர காவல் படையினரும் விரைந்து வந்து உள்ளூர் மீனவர்களின் படகில் சென்று மாணவரை தேடினார்கள். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. அவர் கதி என்ன? என்றும் தெரியவில்லை. மாணவரை தேடும் பணி நடந்து வருகிறது.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், மணிகண்டனின் உறவினர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் மணிகண்டன் கிடைக்காததால் சோகத்தில் மூழ்கினர்.
மணக்குடி தூண்டில் வளைவு பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன் அலையில் சிக்கி இறந்தான். அதைத்தொடர்ந்து அங்கு யாரும் குளிக்க கூடாது என்று எச்சரிக்கை பலகை வைத்து இருந்தனர். அந்த பலகை முறிந்து கிடக்கிறது. எச்சரிக்கை பலகையை மீண்டும் அங்கு அமைத்து யாரும் குளிக்காதபடி தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
No comments