நாகர்கோவில் மாநகராட்சியில் வீடு, வீடாக சளி, காய்ச்சல் பரிசோதனை 2-வது நாளாக நடந்தது. குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதே போல ...
நாகர்கோவில் மாநகராட்சியில் வீடு, வீடாக சளி, காய்ச்சல் பரிசோதனை 2-வது நாளாக நடந்தது.

குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதே போல நாகர்கோவில் மாநகராட்சியிலும் பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 40-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மேலும் வல்லன்குமாரன்விளை மற்றும் கனகமூலம் புதுத்தெரு ஆகிய இடங்களில் அடுத்தடுத்த வீடுகளில் பலருக்கு தொற்று உறுதியானதால் 2 பகுதிகளும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டு உள்ளன. கனகமூலம் புதுத்தெருவில் மட்டும் 4 வீடுகளில் 9 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
தொற்றை கட்டுப்படுத்த மாநகராட்சியில் வீடு, வீடாக சளி, காய்ச்சல் பரிசோதனை நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2-வது நாளாக பரிசோதனை நடந்தது.
இந்த பணிகளை நேற்று மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நோய் பாதித்தவர்களுக்கு கபசுர குடிநீர் தயாரிக்கும் பொடியையும் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகராட்சியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் காய்ச்சல், சளி, இருமல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். தற்போது 2-வது அலை பரவலில் வயிற்றுப்போக்கு, கண் எரிச்சல் உள்ளிட்ட சில அறிகுறி காணப்படும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற அறிகுறி தென்பட்டால் தாமாக முன் வந்து பரிசோதனை செய்வதன் மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்தலாம்.
எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். வீட்டை விட்டு தேவையின்றி வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும். பொதுவெளியில் நடமாடும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். நாகர்கோவிலில் தற்போது 5 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை தொடங்கப்பட்டு உள்ளது. தற்போது வரை 12 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. ஒரு வாரத்துக்குள் முதற்கட்ட சளி பரிசோதனை முடிந்ததும் 2-ம் கட்ட பரிசோதனை தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments