தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தி...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்குப் பின் இந்த கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதன்படி ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல், இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதன்படி பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தனியார் வாகன உபயோகமும் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் அவசர மருத்துவ தேவைகளுக்கும், விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் செல்ல தனியார் வாகனங்களுக்கு அனுமதி உண்டு.
அனைத்து நேரங்களிலும், பால் விநியோகம், மருந்தகம் உள்ளிட்ட அத்திவாசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு. ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதி உண்டு.
ஊடகம் மற்றும் பத்திரிக்கைத் துறையினர் தொடர்ந்து இரவிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படலாம்.
பெட்ரோல், டீசல் பங்குகள் இரவில் செயல்பட அனுமதி உண்டு. அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவில் செயல்பட அனுமதி உண்டு.
உணவகங்களில், காலையில் 6 மணி முதல் 10 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படும். உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களும் அந்த குறிபிட்ட நேரத்தில் மட்டுமே செயல்பட அனுமதி உண்டு.
திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும், துக்க நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்துக் கொள்ள அனுமதிக்கபடுகிறார்கள்.
நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றலா தளங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகள், பூங்காக்கள், உயிரியல் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி புரிவோர்களில் 50% பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்படுகிறது.
கடைகள், வணிக வளாகங்கள் 50% வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
மதம் சார்ந்த திருவிழாக்களுக்கு தடை நீட்டிக்கப்படுகிறது. எனினும் முன் அனுமதி பெற்ற குடமுழுக்கு/ திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு 50 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஆனாலும், புதிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதியில்லை.
மேலும் முகக் கவசம் அணிதல், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.
No comments