கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் 487 பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் நடந்ததில் பெரும்பாலான பெற்றோர்கள் ...
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் 487 பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் நடந்ததில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறக்க கருத்து தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அதன்படி பள்ளிகள் திறக்கலாம் என்று அரசு அறிவித்து உள்ளது. அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
தற்போது பொங்கல் பண்டிகைக்கு பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்புகள் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள், இதர பள்ளிகள் என்று 487 பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பொற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
இந்த கருத்து கேட்பு கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் தலைமையில் அந்தந்த பள்ளிகளில் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நடந்தது.
இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்களிடம் ஒரு படிவம் வழங்கப்பட்டது. அந்த படிவத்தில் பள்ளியின் பெயர் முதலில் இருக்கும். அதன்பிறகு பொங்கல் பண்டிகை ஜனவரி 2021 க்கு பின் பள்ளிகள் திறப்பது பற்றிய கருத்துக்கேட்பு கூட்டம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அடுத்தது நாள் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதன்பிறகு மாணவர் பெயர், வகுப்பு மற்றும் பிரிவு, பெற்றோர் பெயர் என்று குறிப்பிட்டு எழுதுவதற்கு இடம் விடப்பட்டு இருக்கும்.
இந்த இடத்தில் பொற்றோர்கள் எழுதி நிரப்ப வேண்டும். அதற்கு அடுத்ததாக பொங்கல் பண்டிகைக்கு பின் பள்ளி திறப்பது குறித்த தங்கள் கருத்து என்று குறிப்பிட்டு இருந்தது. அதன் கீழ் பகுதியில் ஆம், இல்லை என்று இருக்கும். இதில் பெற்றோர்கள் தங்கள் கருத்துகளின் படி குறிப்பிட்டுள்ள கட்டத்தில் டிக் செய்தனர். அதன்பிறகு இதர கருத்துக்கள் என்று இடம் விடப்படும். இதில் கருத்துகளை பொற்றோர்களில் பலர் பதிவு செய்தனர். சிலர் எதுவுமே பதிவு செய்ய வில்லை.
கடைசியாக கையொப்பம் போட்டு கொடுத்தனர். பெற்றோர்களின் கருத்துக்களை தலைமை ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வழங்குவார்கள். அங்கிருந்து அறிக்கையாக பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பப்படுகிறது. இந்த கருத்து கேட்பு கூட்டத்தை நேரில் சென்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் தலைமையில் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, திருவட்டார் ஆகிய மாவட்ட கல்வி அலுவலர்கள், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலர்கள், வட்டார வளமைய பயிற்றுனர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டு கண்காணித்தனர்.
பெற்றோர்கள் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையில், முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடித்து கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொள்ள கூடிய வகையில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்ததன் படி பெற்றோர்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர். கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளிகள் திறக்க கருத்து தெரிவித்ததாக தெரிய வருகிறது.
No comments