அருமனை அருகே வெள்ளான்கோடு புன்னமூட்டுவிளை பகுதியை சேர்ந்த பர்ணபாஸ் (60) என்பவரது மகன் ஜெனிகுமார் (36). இவர் சென்னை பூக்கடை காவல் நிலையத்தில்...
அருமனை அருகே வெள்ளான்கோடு புன்னமூட்டுவிளை பகுதியை சேர்ந்த பர்ணபாஸ் (60) என்பவரது மகன் ஜெனிகுமார் (36). இவர் சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 22 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் இருந்து மாயமானார். அதில் மனைவி, மாமியார் உள்ளிட்ட உறவினர்கள் மீது புகார் தெரிவித்து இருந்தார். போலீசார் பல இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று ஜெனிகுமார் வீடு திரும்பினார். மகனை பார்த்த பர்ணபாஸ் கட்டித்தழுவி கண்ணீர் வடித்தார். பின்னர் 2 பேரும் அருமனை காவல் நிலையத்தில் ஆஜர் ஆகினர்.
போலீசார் அவரிடம் மாயமானது குறித்து விசாரித்தனர். அப்போது குடும்ப பிரச்சனை காரணமாக நிம்மதி இல்லை. இதனால் நிம்மதி தேடி கோயில் கோயிலாக சென்றேன். கன்னியாகுமரி, சுசீந்திரம், மண்டைக்காடு உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களுக்கும் சென்று வழிபட்டேன்.
போலீசார், உறவினர்கள் தேடுவதை அறிந்தேன். 2 பிள்ளைகளையும் பார்க்க முடியாத ஏக்கத்தில் தவித்தேன். இதையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டேன் எனக்கூறினார். தொடர்ந்து போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
No comments