குமரி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்து 600 டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து கொண்டு வரப்பட்டது. வருகிற 16-ம் தேதி முதல் மருத்துவ மற்றும் சுகாதார பணியா...
குமரி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்து 600 டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து கொண்டு வரப்பட்டது. வருகிற 16-ம் தேதி முதல் மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு போடப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கடந்த 8-ம் தேதி இதற்கான ஒத்திகை நடைபெற்றது.
குமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனை, செண்பகராமன்புதூர் அரசு ஆரம்பசுகாதார நிலையம், வட்டவிளை அரசு நகர்புற ஆரம்பசுகாதார நிலையம் மற்றும் டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் கோவிட்-19 தடுப்பூசி திட்டத்திற்கான ஒத்திகை நடைபெற்றது.
தடுப்பூசி திட்டத்திற்கும் கள சூழலில் அதை செயல்படுத்துவதற்கும் இடையிலேயான நடைமுறைகளை சோதனை செய்வது மற்றும் சவால்களை அடையாளம் காணும் வகையில் இந்த ஒத்திகை நடந்தது.
தடுப்பூசி போடுவதற்காக வரும் 17-ம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக குமரி மாவட்டத்திற்கு முதல் கட்டமாக 20 ஆயிரத்து 600 டோஸ் தடுப்பூசி மருந்து வழங்கப்பட்டுள்ளது.
இதனை குமரி மாவட்ட சுகாதாரத்துறை பணியாளர்கள் நெல்லை மாவட்டத்தில் இருந்து வாகனத்தில் எடுத்து வந்தனர். இந்த மருந்து கிருஷ்ணன்கோவில் உள்ள தடுப்பு மருந்து கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வரும் 16-ம் தேதி முதல் 4 கட்டமாக தடுப்பூசி பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அனைத்து மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும், 2-ம் கட்டமாக கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் முன்கள பணியாளர்களுக்கும், 3-ம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், நான்காம் கட்டமாக அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தடுப்பூசி திட்ட பணிக்கு தேவையுள்ள மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் விவரங்களை COWIN என்ற செயலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள் தடுப்பூசியினை எங்கே எந்த இடத்தில் பெற வேண்டும் என்ற விவரங்கள் அவர்களின் கைபேசிக்கு COWIN செயலி மூலம் குறுந்தகவல் சென்றடையும்.
மேலும் அவர்கள் தடுப்பூசி பெற்ற பின்னர் தடுப்பூசி பெற்ற விபரங்கள் COWIN செயலில் பதிவேற்றம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments