மணவாளக்குறிச்சி அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இரு தரப்பை சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் க...
மணவாளக்குறிச்சி அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இரு தரப்பை சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

மணவாளக்குறிச்சி அருகே கல்லடிவிளை பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன்(57). இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது உறவினர் திருமணம் மணவாளக்குறிச்சியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடத்த மண்டப வாசலில் வாழைக்குலை, இளநீர்குலை மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பிபின், முருகன், ரமேஷ், முருகேசன் மற்றும் ஸ்டெபின் ஆகியோர் இளநீர்குலையில் இருந்து இளநீர் காய்களை பறித்ததாக கூறப்படுகிறது. இதை நீலகண்டன் தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் இரு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் வாக்குவாதம் நடந்தது. தொடர்ந்து கோஷ்டி மோதல் உருவானது. இதில் நீலகண்டன் மற்றும் ரமேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த நீலகண்டன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியிலும் ரமேஷ் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து நீலகண்டன் மற்றும் ரமேஷ் தனித்தனியாக மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments