மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித...
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கிள்ளியூர் சட்டசபை தொகுதி காங்கிரஸ் சார்பில் கருங்கலில் இருந்து பாலப்பள்ளம் வரை ஏர்கலப்பை பேரணி நடத்தப்படும் என ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிவித்து இருந்தார்.

இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை எனத்தெரிகிறது. ஆனாலும், திட்டமிட்டபடி நேற்று மாலை கருங்கல் ராஜீவ்காந்தி சிலை முன்பு ஏராளமான காங்கிரசார் குவிய தொடங்கினர். ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் திரண்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.
தொடர்ந்து, அவர்கள் பாலப்பள்ளம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். பேரணிக்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கிள்ளியூர் கிழக்கு வட்டார தலைவர் டென்னிஸ், முன்சிறை கிழக்கு வட்டார தலைவர் பால்ராஜ், மேற்கு வட்டார தலைவர் கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், விஜயதரணி, காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேரணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து பேரணியானது ராஜீவ்காந்தி சிலை சந்திப்பில் இருந்து பாப்பள்ளம் நோக்கி புறப்பட்டது. கருங்கல் போலீஸ் நிலையம் முன்பு சென்ற போது குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி தலைமையிலான போலீசார், அனுமதியின்றி பேரணி செல்வதாக கூறி தடுத்து நிறுத்தினர்.
இதனை தொடர்ந்து பேரணியில் கலந்து கொண்டவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கருங்கல் -திங்கள்சந்தை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து ேபாராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி மற்றும் 79 பெண்கள் உள்பட 396 பேரை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த போராட்டத்தில் ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் குமரி மேற்குமாவட்ட தலைவர் சாமுவேல் ஜார்ஜ், மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செலின்மேரி, சிறுபான்மை பிரிவு வட்டார தலைவர் ஜான்வெர்ஜின் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போராட்டதால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், பாதுக்காப்பு பணிக்காக 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
No comments