கன்னியாகுமரி மாவட்டம், கடையாலுமூடு அருகே சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவா் உயிரிழந்ததால், தனியாா் மருத்துவமனையை அவரது உறவினா்கள் புதன்கிழம...
கன்னியாகுமரி மாவட்டம், கடையாலுமூடு அருகே சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவா் உயிரிழந்ததால், தனியாா் மருத்துவமனையை அவரது உறவினா்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

கடையாலுமூடு, பூமூட்டுவிளையைச் சோ்ந்தவா் புருஷோத்தமன். சலவைத் தொழிலாளி. இவரது மகன் அபினேஷ் (12), அங்குள்ள அரசுப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இவருக்கு கடந்த 30 ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டதால் கடையாலுமூடு சந்திப்பிலுள்ள தனியாா் மருத்துவமனையில்அனுமதித்தனா். இரு நாள்கள் சிகிச்சை பெற்ற அவருக்கு உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டதால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி பெற்றோரிடம் மருத்துவா்கள் அறிவுறுத்தினராம். இதனால், நாகா்கோவிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு அவரை செவ்வாய்க்கிழமை இரவு கொண்டு செல்கையில் வழியிலேயே மாணவா் உயிரிழந்தாா்.
இதையடுத்து, தவறான சிகிச்சையால் மாணவா் உயிரிழந்ததாகக் கூறி, சடலத்துடன் கடை யாலுமூடு தனியாா் மருத்துவமனையை அவரது உறவினா்கள் முற்றுகையிட்டனா். தகவலறிந்த தக்கலை டி எஸ்பி ராமச்சந்திரன் மற்றும் போலீஸாா் அங்கு வந்து அவா்களிடம் பேச்சு நடத்தி, சடலத்தை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவரை கைது செய்யக் கோரி, பாஜக நிா்வாகி மனோகரன் தலைமையில், அனைத்து கட்சியினா் மற்றும் பொதுமக்கள் கடையாலுமூடு சந்திப்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், கடையாலுமூடு பேருராட்சி முன்னாள் தலைவா் எஸ்.ஆா்.சேகா், மேல்புறம் ஒன்றிய திமுக செயலா் சிற்றாறு ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அவா்களிடம், டிஎஸ்பி ராமச்சந்திரன், விளவங்கோடு வட்டாட்சியா் ராஜமனோகரன், மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் ஜான் பிரிட்டோ ஆகியோா் பேச்சு நடத்தி, மருத்துவமனைக்கு சீல் வைத்ததுடன், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததால், அனைவரும் கலைந்து சென்றனா்.
No comments