குமரி மாவட்டத்தை சேர்ந்த 63 வயது முதியவர் பலியான நிலையில் அவருக்கு நடத்தபட்டிருந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. கு...
குமரி மாவட்டத்தை சேர்ந்த 63 வயது முதியவர் பலியான நிலையில் அவருக்கு நடத்தபட்டிருந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான முதல் நபர் இவர்.

சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நோயாளிகள் உள்ளிட்ட பலரும் சொந்த ஊர்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதில் குமரி மாவட்டம் மயிலாடி பகுதியை சேர்ந்த 63 வயது முதியவர் ஒருவர் புற்றுநோயால் அவதிபட்டு வந்தார். அவர் சிகிச்சைக்காக சென்னை சேத்துப்பட்டுவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அவரது உடல் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்ததால், அவரை சொந்த ஊருக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க உறவினர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து சென்னையில் இருந்து ஆம்புலன்சில் அவர் அழைத்து வரப்பட்டார்.
கடந்த 9-ம் தேதி சனிக்கிழமை மாலையில் அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தனிமைபடுத்தப்பட்ட வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டு இருந்தது.
முன்னதாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ய சளி, ரத்தம் எடுக்கப்பட்டிருந்தது. பரிசோதனை முடிவுகள் வந்தபின்னர், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று இரவு முடிவுகள் வெளியான நிலையில், அவருக்கு நோய் தொற்று இருந்தது உறுதி செய்யபட்டது. இதை தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு சளி, ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.
இருப்பினும், ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பலியான முதியவர் உடல் விதிமுறைகளின்படி தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. சொந்த ஊருக்கு எடுத்து சென்று தகனம் செய்யும் முடிவு கைவிடப்பட்டது. மேலும் நாகர்கோவில் அருகே உள்ள புளியடியில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சியின் மின்சார தகன மேடையில் கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது. அவரது உடல் மூன்று அடுக்கு கவச உடையால் மூடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
குமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு முதல் பலி இதுவாகும்.
No comments