குமரி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 2 பேருக்கு கொரோனா அறிகுறியே இல்லாமல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டு...
குமரி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 2 பேருக்கு கொரோனா அறிகுறியே இல்லாமல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பாதிப்பு எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அவர்களில் 6 பேர் மட்டும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரு பெண்ணுக்கு சென்னையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னைக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக சென்ற முதியவர், மீண்டும் குமரிக்கு வந்த போது கொரோனாவுக்கு பலியானார். குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு இவர் தான் முதல் பலி. இதற்கிடையே மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் குமரியில் பாதிப்பு 28 ஆக உயர்ந்துள்ளது.
மயிலாடி பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க வக்கீல் ஒருவர் கடந்த 50 நாட்களுக்கு முன்பு சென்னை சென்று ஊர் திரும்பியுள்ளார். அவர் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்குமோ? என்ற சந்தேகத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள சென்றார். அவரிடம் சளி மாதிரி எடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த வக்கீலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இவருக்கும் சென்னையில் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் கோர்ட்டு ஊழியராக பணியாற்றும் ஒரு பெண் கடந்த சில நாட்களுக்கு முன் அவரது சொந்த ஊரான ஆசாரிபள்ளத்தை அடுத்த பாம்பன்விளை பகுதிக்கு வந்துள்ளார். அவர் மீண்டும் வேலைக்கு செல்ல முடிவு செய்து தஞ்சையில் உள்ள கோர்ட்டு உயர் அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அப்போது அதிகாரிகள், நீங்கள் வேலைக்கு வரவேண்டும் என்றால் கொரோனா தொற்று பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்ற பரிசோதனை அறிக்கையுடன் வரவேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து அவரும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதில் அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனால் அவரும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். தொற்று உருவான வக்கீலுக்கும், கோர்ட்டு ஊழியருக்கும் அறிகுறியே இல்லாமல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் பெங்களூருவில் இருந்து குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு பெண் வந்தார். அவருக்கு ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் சளி மாதிரி சேகரித்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அவருக்கு 2-வது பரிசோதனை மேற்கொள்ள அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து தனிமைப்படுத்தி உள்ளனர். அவருக்கு மீண்டும் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 2-வது பரிசோதனையிலும் அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தால், புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயரும். இந்த எண்ணிக்கை விவரம் இன்றைய (செவ்வாய்க்கிழமை) பட்டியலில் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments