மதுரை மேலஅனுப்பானடி காமாட்சி அம்மன் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சிவகுமார். டிரைசைக்கிள் தொழிலாளி. அவருடைய மனைவி தாளாட்சி. இவர்களுடைய 8 மாத ...
மதுரை மேலஅனுப்பானடி காமாட்சி அம்மன் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சிவகுமார். டிரைசைக்கிள் தொழிலாளி. அவருடைய மனைவி தாளாட்சி. இவர்களுடைய 8 மாத குழந்தை சிவதர்ஷன்.

சில மாதங்களுக்கு முன்பு இந்த தம்பதியினர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சிவகுமார் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தாளாட்சி தனது குழந்தையுடன் அருகில் உள்ள அவருடைய அக்காள் உமா வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு கழிவறைக்கு சென்று விட்டு தண்ணீருக்காக அருகில் உள்ள கிணற்றில் நீரை இறைத்துள்ளார். அப்போது இடுப்பில் வைத்திருந்த அவருடைய குழந்தை சிவதர்ஷன் திமிரியதால் கிணற்றில் தவறி விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் தாளாட்சி அலறினார்.
அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க போராடினார்கள். ஆனால் அவர்களால் குழந்தையை மீட்க முடியவில்லை.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது குழந்தை இறந்துவிட்டது தெரியவந்தது.
இந்நிலையில் தெப்பக்குளம் போலீசார் விரைந்து வந்தனர். குழந்தை உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கணவன் பிரிந்து சென்றுவிட்டதால் கடந்த சில நாட்களாக தாளாட்சி மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டுள்ளார். எனவே அவர் தண்ணீர் இறைத்த போது குழந்தை கிணற்றில் தவறி விழுந்ததா அல்லது அவர் குழந்தையை கிணற்றில் வீசினாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
No comments