தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் நடந்தது. இதேபோல், ஏனைய 2...
தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் நடந்தது. இதேபோல், ஏனைய 28 மாவட்டங்களில் நிரப்பப்படாத மற்றும் காலியிட பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் கடந்த 9ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் கடந்த 12ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த தேர்தல்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியின்றி மற்றும் போட்டி மூலம் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் 20-ம் தேதி காலை 10 மணிக்கு பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி பஞ்சாயத்து தலைவராக, தமிழகத்தின் மூத்த பஞ்சாயத்து தலைவியாக 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் பதவியேற்றார். பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்ட 90 வயது மூதாட்டி பெருமாத்தாள், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்தார்.
அவருக்கு மொத்தம் 2060 வாக்குகள் பதிவான நிலையில் 1568 வாக்குகள் பெற்று பெருமாத்தாள் வெற்றி பெற்றார். அடுத்தபடியாக 440 வாக்குகளும் அதற்கு அடுத்தவர் உமா என்பவர் 72 வாக்குகளும் பெற்றார். 90 வயது மூதாட்டியின் இந்த வெற்றி இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது.
தனது வெற்றி குறித்து மூதாட்டி பெருமாத்தாள் கூறுகையில், "எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. நாங்கள் எப்போதுமே ஊர் மக்களுக்கு நல்லது செய்கிறோம். அதனால் தான் இந்த வெற்றி சாத்தியமானது. நான் தற்போது தான் முதல் முறையாக நின்று வெற்றி பெற்றுள்ளேன். ஊர் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
No comments