குமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை நிறைவு விழாவான நேற்று இரவு ஒடுக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்...
குமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை நிறைவு விழாவான நேற்று இரவு ஒடுக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவில் சமய மாநாடு, பஜனை, வில்லிசை, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
6-ஆம் திருநாளான மாா்ச் 6-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை பூஜையும், 9-ஆம் திருநாளான திங்கள்கிழமை (மாா்ச் 9) இரவு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனியும், பெரிய சக்கர தீவட்டி ஊா்வலமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அன்புமணி தலைமை வகித்தாா். தீவட்டிக் குழுத் தலைவா் முருகன், துணைத் தலைவா் ஹரிகிருஷ்ணன், செயலா் நேசமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) அதிகாலை 2 மணிக்கு சாஸ்தா கோயிலிலிருந்து யானை மீது களபம் பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் திருவீதியுலா வருதல் நிகழ்ச்சியும், 4.30 முதல் 5 மணிவரை அடியந்திர பூஜை, குத்தியோட்டமும், நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜையும் நடைபெற்றன.
விழாவில், குமரி மாவட்டம் மட்டுமன்றி தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா். ஒடுக்கு பூஜையை முன்னிட்டு குமரி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. நாகா்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, மாா்த்தாண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மண்டைக்காட்டுக்கு அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.
No comments