தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் புதிய தலைவராக எல். முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவ...
தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் புதிய தலைவராக எல். முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.

தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதியன்று அறிவிக்கப்பட்டார். அவருக்குப் பிறகு, தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாக் கட்சிக்கு புதிதாக தலைவர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை.
தற்போதைய தேசியச் செயலர் எச். ராஜா, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன், கே.டி. ராகவன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் ஆகியோரில் ஒருவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படலாம் எனக் கூறப்பட்டது.
இது தொடர்பாக தேசிய நிர்வாகிகள் தமிழகம் வந்து, பல மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்து கருத்துக்களைப் பெற்று, கட்சித் தலைமையிடம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில்தான் பா.ஜ.கவின் புதிய மாநிலத் தலைவராக எல். முருகன் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா அறிவித்திருக்கிறார்.
தற்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக செயல்பட்டுவரும் எல். முருகன், 1977ஆம் ஆண்டு பிறந்தவர். சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த எல். முருகன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் செயல்பட்டுவந்தார்.
ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவராக நியமிக்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பாக 2000வது ஆண்டில் டாக்டர் கிருபாநிதி பா.ஜ.கவின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டு, செயல்பட்டார்.
No comments