தமிழகத்தில் கொரோனா பரவலால் குறிப்பிட்ட மாவட்டங்களை தவிர பல இடங்களில் இன்னும் தளர்வில்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகர்கோ...
தமிழகத்தில் கொரோனா பரவலால் குறிப்பிட்ட மாவட்டங்களை தவிர பல இடங்களில் இன்னும் தளர்வில்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாகர்கோவிலில் ஆதரவற்றோர் மற்றும் பிச்சைக்காரர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்கவும், உணவு சரியாக கிடைக்கவும் மாநகராட்சி அதிகாரிகளும், காவல்துறையும் இணைந்து அவர்களை மீட்டு அரசு விடுதிகளில் சேர்த்து வருகிறார்கள்.
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் பகுதியில் தங்கியிருந்த 3 பிச்சைக்காரர் களை நாகர்கோவில் கட்டுப்பாட்டு அறை காவல்துறை மீட்டு விசாரணை நடத்தியது. இவர்களில் குமார் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 50. அவரிடம் மேற்கொண்ட பரிசோதனையில் பிச்சையெடுத்து சேமித்த பணம் ரூ.3,500 மற்றும் ஒரு அடி நீளமுள்ள கத்தியும் இருந்ததில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
குமார் தெரிவித்த பதிலில் காவல்துறை அதிர்ச்சி அடைந்தது. அதில் பிச்சை எடுத்த பணத்தை கஞ்சாபோதை ஆசாமிகள் பறித்துச் செல்வதாகவும் அவர்களை எச்சரிக்கை செய்ய கத்தி வைத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் கருங்கலில் இருந்து தினமும் ஆட்டோவில் நாகர்கோவிலுக்கு வந்து பிச்சை எடுத்து செல்வதாகவும், கருங்கலில் அவர் வீடு கட்டி வாடகைக்கு விட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்றுக்கள் இல்லாதவர்கள் அரசு விடுதிகளில் சேர்க்கப்பட்டனர்.
மேலும் அவரவர் திறமைக்கேற்றவாருக்கு பணிக்கு அனுப்பவும் காவல்துறை முடிவு செய்துள்ளது. காவல்துறையின் இந்த செயலுக்கு பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.
இந்த முயற்சியை தடையின்றி முன்னெடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும், பிச்சைக்காரர்களுக்கு காசு, பணம் கொடுத்து மக்கள் ஊக்குவிக்க வேண்டாம் எனவும், அவர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்து சமூகத்தில் அவர்களும் நல்ல வாழ்க்கையை வாழ வாய்ப்புகளை உருவாக்கி தரவும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments