மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தெர்மல் ஸ்கேனர் சோதனைக்குபின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கட...
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தெர்மல் ஸ்கேனர் சோதனைக்குபின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வழிபாட்டு ஸ்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் கோயில்களில் நடக்கும் தினசரி பூஜைகள் எந்த தடங்கலுமின்றி முறையாக நடந்து வந்தது. கடந்த மாதம் ரூ.10,000 க்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள சிறிய வழிபாட்டு ஸ்தலங்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
தற்போது 160 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் முதல் அனைத்து வழிபாட்டு ஸ்தலங்களையும் திறக்க மாநிலஅரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து விடப்பட்டது. அதிகாலை கோயிலுக்கு வெளியிலும் உள் பகுதியிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. காலை 7 மணி முதல் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கோயிலின் முகப்பு வாசல் வழியாக மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு சென்றுவர அனுமதிக்கப்பட்டனர்.
மற்ற மூன்று வாசல்களும் மூடப்பட்டிருந்தது. கோயிலுக்கு வெளியில் பாதணிகளை போட்டுவிட்டு பக்கத்தில் உள்ள பைப் நீரில் கால்களை நனைத்துவிட்டுவரும் பக்தர்களுக்கு முதலில் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் சூட்டை சோதித்த பின்னரே கோயிலுக்குள் அனுமதி வழங்கப்படுகிறது.
தொடர்ந்து கைகளை சுத்தம் செய்ய திரவம் வழங்கப்பட்டு உள்ளே தரிசனத்திற்காக அமைக்கப்பட்டுள்ள கியூ வழியாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வரையப்பட்டுள்ள வட்டத்திற்குள் நின்று தரிசனம் செய்தபின் கிழக்கு வாசல் வழியாக மீண்டும் முகப்பு வாசல் வந்து வெளியில் அனுப்பப்படுகின்றனர். பக்தர்கள் காணிக்கையாக கொண்டுவரும் எந்த பொருட்களும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. அவைகளை வெளியில் வைத்துவிட்டு செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.
நேர்ச்சைகள் மற்றும் வழிபாடுகள் நடத்த பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்டியலில் காணிக்கை செலுத்த எந்த தடையுமில்லை. கோயிலுக்குள் பக்தர்கள் அமரவோ, பரிவார மூர்த்திகள் தரிசனத்திற்கோ அனுமதிக்கப்படவில்லை. தரிசனம் முடிந்து வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வெளியில் வைக்கப்பட்டிருந்தது. தீபாராதனை நேரத்தில் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. நேற்று முன்தினம் ஆவணி மாத பவுர்ணமி நாளாக இருந்ததால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
No comments