கன்னியாகுமரியில் பிரபல ஓட்டலில் பார் வசதி உள்ளது. நேற்று முன்தினம் இரவு அந்த மதுபாருக்குள் 3 நபர்கள் அரிவாளுடன் புகுந்தனர். பின்னர் அங்குள்ள...
கன்னியாகுமரியில் பிரபல ஓட்டலில் பார் வசதி உள்ளது. நேற்று முன்தினம் இரவு அந்த மதுபாருக்குள் 3 நபர்கள் அரிவாளுடன் புகுந்தனர். பின்னர் அங்குள்ள ஊழியர்களை அரிவாளை காட்டி பணம் கேட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பார் மேலாளர் இதுபற்றி கன்னியாகுமரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பணம் கேட்டு ரகளையில் ஈடுபட்ட 3 பேரையும் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், 3 பேரும் மதுபோதையில் இருந்ததும், அவர்கள் சென்னையை சேர்ந்த ஆகாஷ் (வயது 20), கிருஷ்ணன் (21), ஹாரிஸ் (19) என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்ற தகவலும் வெளியானது.
அதாவது, சென்னையில் 3 பேரும் பல இடங்களில் கைவரிசை காட்டியுள்ளதாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளன. தற்போது கன்னியாகுமரியில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்த நிலையில் மதுபாரில் பணம் கேட்டு ரகளையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments