குளச்சல் அருகே குறும்பனையில் கடல் சீற்றம் காரணமாக சகாய மாதா தெருவில் உள்ள 15-க்கும் மேற்பட்ட வீடுகளை கடல் நீர் சூழ்ந்தது. இதனால், மீனவர்கள...
குளச்சல் அருகே குறும்பனையில் கடல் சீற்றம் காரணமாக சகாய மாதா தெருவில் உள்ள 15-க்கும் மேற்பட்ட வீடுகளை கடல் நீர் சூழ்ந்தது. இதனால், மீனவர்கள் தங்கள் வீடுகளை பாதுகாக்க மணல் மூடைகளை அடுக்கி வைத்திருந்தனர்.

இந்நிலையில் கடல் சீற்றத்தால் மணல் மூடைகள் சரிந்து கடலில் விழுந்தன. அப்பகுதியில் அரிப்பு ஏற்பட்டு வீடுகள் அலையில் இழுத்துச் செல்லப்படும் நிலையில் உள்ளன. இதனால், மேற்கு பகுதியில் உள்ள தூண்டில் வளைவை நீட்டிக்க வேண்டும், மீன்பிடி தொழிலுக்கு பாதிப்பு இல்லாமல் அலை தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதுபற்றி அறிந்த குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ், பொதுப்பணித்துறை கடலரிப்பு தடுப்பு கோட்ட உதவி பொறியாளர் ராதா, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் எனல்ராஜ் ஆகியோருடன் குறும்பனை பகுதிக்கு சென்று கடலரிப்பு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டார். கடலரிப்பு பகுதியில் தடுப்பு சுவர் அமைப்பது குறித்து அவர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து பிரின்ஸ் எம்.எல்.ஏ. கூறுகையில், கடல் அரிப்பில் இருந்து குறும்பனை சகாயமாதா தெருவில் உள்ள வீடுகளை பாதுகாக்க அலை தடுப்பு சுவர் அமைப்பது அவசியமாகும். இதுபற்றி மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிடுவதாக கூறினார்.
No comments