தக்கலை அருகே 17 வயது கல்லூரி மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக தந்தை, கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்ப...
தக்கலை அருகே 17 வயது கல்லூரி மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக தந்தை, கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியும், புலியூர் குறிச்சி உதயகிரி கோட்டையை சேர்ந்த சுதீஷ் (வயது 22) என்பவரும் காதலித்து வந்தனர். இதற்கு மாணவியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் மாணவியை தக்கலையில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்தார்.
இந்நிலையில் மாணவிக்கு திருமணம் செய்து வைக்க, அவரது தந்தை முடிவு செய்தார். அதைத்தொடர்ந்து அவர்கள் உறவினருடன் சேர்ந்து, புலியூர் குறிச்சியை சேர்ந்த விவேக் (36)என்பவரை பார்த்து, கடந்த 13-ம் தேதி மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
திருமணம் முடிந்த அன்று இரவு கல்லூரி மாணவிக்கு அவருடைய கணவர் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. அப்போது கணவரிடம், தான் ஏற்கனவே சுதீஷ் என்பவரை காதலித்து வந்ததாகவும், மேலும் திருமண வயதை எட்டாத தனக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து விட்டதாகவும் மாணவி கூறினார். அதைத்தொடர்ந்து விவேக் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் கல்லூரி மாணவி, தனக்கு நடந்த கட்டாய திருமணம் தொடர்பாக கணவர் விவேக், மாமனார் கோலப்பன், மாமியார் ராதா, தந்தை மாடசாமி, சித்தி சரஸ்வதி, காதலன் சுதீஷ் ஆகியோர் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் 6 பேர் மீதும் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments