45 நாட்களுக்கு பிறகு குமரி மாவட்டத்தில் நேற்று தனிக்கடைகள் திறக்கப்பட்டன. இதனால் இயல்புநிலைக்கு திரும்பியதை போல் மக்கள் கூட்டமாக ஆங்காங்கே...
45 நாட்களுக்கு பிறகு குமரி மாவட்டத்தில் நேற்று தனிக்கடைகள் திறக்கப்பட்டன. இதனால் இயல்புநிலைக்கு திரும்பியதை போல் மக்கள் கூட்டமாக ஆங்காங்கே சுற்றியதை காணமுடிந்தது. மேலும் வாகன நெரிசலும் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
![]() |
வடசேரி பகுதியில் மக்கள் நடமாட்டம் |
கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 3-வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.
ஊரடங்கையொட்டி முதலில் குமரி மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பின்னர் மக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு மளிகை கடைகள், தற்காலிக காய்கறி சந்தைகள், பால் கடைகள், இறைச்சி கடைகள் போன்றவை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது. உணவகங்கள் (பார்சல் மட்டும்) காலை, மதியம், இரவு வேளைகளில் குறிப்பிட்ட நேரம் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டு இருந்தன. மருந்து கடைகள், ஆவின் பாலகங்கள் நாள் முழுவதும் திறக்க அனுமதிக்கப்பட்டன.
பிற வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டல பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, தனிக்கடைகள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் அனுமதி வழங்கப்பட்டன.
அதன்படி குமரி மாவட்டத்தில் தனிக்கடைகள் அனைத்தும் திறக்க நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டது. அதுவும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கடை உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில் குமரி மாவட்டத்தில் முடி திருத்தகம், அழகு நிலையங்கள், கண் கண்ணாடி விற்பனையகம், அலங்கார நகை விற்பனையகம், குளிர்சாதன வசதி செய்யப்பட்ட நகைக்கடை, துணிக்கடை, வீட்டு உபயோக சாதனங்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள், பீடா கடைகள், தேனீர் கடைகள் திறக்கப்பட்டால் கடைகள் மூடி சீல் வைக்கப்படும் என்றும், பேரங்காடிகள் (மால்கள்), பல்வளாக பேரங்காடிகள் (மல்ட்டி பிளக்ஸ்), வணிக வளாகங்கள் (காம்ப்ளக்ஸ்) மற்றும் அவற்றில் செயல்படும் கடைகள் செயல்பட அனுமதி இல்லை என்றும் கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவித்துள்ளார்.
சுயமாக தொழில் செய்யும் பிளம்பர்கள், எலக்ட்ரீசியன்கள், ஏ.சி. மெக்கானிக், தச்சு பணியாளர்கள் மற்றும் பிற பணியாளர்கள் வசிக்கும் உள்ளாட்சி பகுதி எல்லைக்குள் மட்டும் தொழில் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அறிவிப்பின்படி 45 நாட்களுக்கு பிறகு நேற்று காலை 6 மணிக்கே குமரி மாவட்டத்தில் அனைத்து தனிக்கடைகளும் திறக்கப்பட்டன. நாகர்கோவிலிலும் நேற்று குளிர்சாதன வசதி இல்லாத தனி ஜவுளிக்கடைகள், ரெடிமேடு கடைகள், பழக்கடைகள், மின்சாதனங்கள் விற்பனை செய்யும் கடைகள், பழக்கடைகள், பேன்சி கடைகள், பூக்கடைகள், பாத்திரக்கடைகள், தார்ப்பாய் கடைகள், நோட்டு புத்தகம் விற்பனை செய்யும் கடைகள், ஹார்டுவேர்ஸ் கடைகள், வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், செல்போன் கடைகள், செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், மிக்சி, கிரைண்டர், டி.வி, கம்ப்யூட்டர் பழுதுபார்க்கும் கடைகள் என அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன.
ஊரடங்கு தொடங்கியதில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி கடைகள், சந்தைகளில் மட்டும் தான் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை காண முடிந்தது. ஆனால் நேற்று காலையில் இருந்து மதியம் வரை அனைத்து கடைகளிலும் கூட்டம் அதிகமாக காட்சி அளித்தது.
வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டுவோர் சிமெண்டு, இரும்பு போன்றவற்றை கொள்முதல் செய்வதற்காக திரண்டதால் ஹார்டுவேர்ஸ் கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. அதேநேரத்தில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள நகைக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. நெருக்கமான கடைகள் அமைந்துள்ள அலெக்சாண்டிரா பிரஸ் ரோடு, செம்மாங்குடி ரோடு போன்ற பகுதிகள் நேற்று முன்தினமே அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன.
இதனால் கடைகள் திறக்கப்பட்டு இருந்த பகுதிகள் அனைத்திலும் மக்கள் கூட்டம் பெருமளவில் இருந்தது. குறிப்பாக நாகர்கோவில் கேப் ரோடு, கே.பி.ரோடு, வடசேரி, மணிமேடை பகுதி, வேப்பமூடு பகுதி, கோட்டார் பகுதி, வெட்டூர்ணிமடம் பகுதி, கோர்ட்டு ரோடு பகுதி என அனைத்து பகுதிகளில் உள்ள கடைகளிலும் அளவுக்கு அதிகமான கூட்டத்தை காண முடிந்தது.
45 நாட்களுக்குப் பிறகு கடைகள் திறக்கப்பட்ட நேற்றைய தினத்தில் மக்கள் ஆங்காங்கே உற்சாகமாக சுற்றியதை பார்க்கையில் இயல்பு நிலைக்கு திரும்பியதை போன்ற பிரமிப்பை ஏற்படுத்தியது.
அதேபோல் வாகன போக்குவரத்தும் அதிக அளவில் காணப்பட்டது. பள்ளி கல்லூரி திறக்கப்பட்ட நாட்களில் காலை நேரங்களில் காணப்படும் வாகன நெரிசலைப்போன்று நேற்று நாகர்கோவில் நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல் குமரி மாவட்டத்தில் களியக்காவிளை, குழித்துறை, மார்த்தாண்டம், குலசேகரம், குளச்சல், தக்கலை, கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், ஆரல்வாய்மொழி, தோவாளை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்கள் கூட்டமும், வாகன போக்குவரத்தும் அதிக அளவில் காணப்பட்டது.
No comments