மணவாளக்குறிச்சி பகுதியில் புதியதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபான கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மணவாளக்...
மணவாளக்குறிச்சி பகுதியில் புதியதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபான கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மணவாளக்குறிச்சி, ஆற்றின்கரை பாலம் பகுதியில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபான கடையை மூட வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த ஊர்த்தலைவர்கள் ரவி, சாந்தகுமார், பாலகிருஷ்ணன், நிர்வாகிகள் சக்திதரன், குமார், கண்ணன் உள்பட பொதுமக்கள் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மணவாளக்குறிச்சி பாலத்தில் இருந்து 50 அடி தூரத்தில் எங்கள் ஊர் உள்ளது. இங்கு 180 வீடுகள், சிபிஎஸ்இ பள்ளி, வழிபாட்டுத்தலங்கள், சிவந்தமண், கல்லடிவிளை குக்கிராமங்கள், ஆதிதிராவிடர் காலனி, அரசு தொடக்கப்பள்ளி, பஸ் நிறுத்தம், கடைவீதிக்கு செல்லும் பொதுவான சாலை உள்ளது. இது அடிக்கடி விபத்து நடக்கும் பகுதியாகவும் உள்ளது.
இந்நிலையில் பாலத்தில் மிகஅருகில் கடந்த 28-ஆம் தேதி டாஸ்மாக் கடை புதியதாக திறக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் இங்கு அமைதியாக வாழ்ந்து வரும் நிலையில், அதை கெடுக்கும் வகையில் இந்த டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, டாஸ்மாக் கடையை இப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments