உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில், ஜப்பானின் நஸோமி ஓகுஹராவை வீழ்த்திய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 5வத...
உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில், ஜப்பானின் நஸோமி ஓகுஹராவை வீழ்த்திய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 5வது பதக்கத்தை கைப்பற்றி மகத்தான சாதனை படைத்தார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், பி.வி.சிந்து (24 வயது, 5வது ரேங்க்) - நஸோமி ஓகுஹரா (24 வயது, 3வது ரேங்க்) நேற்று மோதினர்.

கடந்த 2 ஆண்டுகளிலும் இறுதிப் போட்டியில் தோற்று வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தியடைந்திருந்த சிந்து, இம்முறை தங்கம் வெல்லும் முனைப்புடன் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்தார்.
அவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓகுஹரா ஸ்தம்பித்து நிற்க, முதல் செட்டை 21-7 என்ற கணக்கில் கைப்பற்றிய சிந்து முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த அவர் 21-7, 21-7 என நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இப்போட்டி வெறும் 38 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்று மகத்தான சாதனை படைத்துள்ள சிந்துவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் இருவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் உட்பட பல்வேறு துறை பிரபலங்களும் ட்விட்டரில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
No comments