ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- ர...
ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால் பகுதியை சேர்ந்தவர் ஆண்டனி என்ற ஜெகன் (வயது 42) தொழிலாளி. இவரது மகன் ஜார்ஜ் ஜெரிஸ் (17). கோணம் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். ஜெகன் கடந்த 2 மாதங்களாக குடும்பத்துடன் கணபதிபுரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று அவர் தனது மகன் ஜார்ஜ் ஜெரிசுடன் மோட்டார் சைக்கிளில் ஆலங்கோட்டை புறப்பட்டார். கணபதிபுரம் பகுதியில் சென்ற போது எதிரே தெக்கூரை சேர்ந்த தேவானந்த் (28) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் 2 மோட்டார் சைக்கிள்களிலும் இருந்த தந்தை, மகன் உள்பட 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவர் ஜார்ஜ் ஜெரிஸ் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments