நாகா்கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று பிற்பகல் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது. கன்னியாகுமரி மாவட்டத்தில்...
நாகா்கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று பிற்பகல் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. பகலில் மக்கள் வெளியே செல்லமுடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. மேலும், இரவில் அனல் காற்று வீசியது. இதனால் இரவில் தூங்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனா்.
இந்நிலையில், நேற்று பகலிலும் வழக்கம் போல் வெயிலின் தாக்கம் இருந்த நிலையில், பிற்பகல் 1 மணிக்கு மேல் கருமேகங்கள் திரண்டன. தொடா்ந்து பிற்பகல் 2 மணிக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த மழை நீடித்தது.
இதனால் நாகா்கோவில் நகரில் கோட்டாறு, செம்மாங்குடி சாலை, அவ்வைசண்முகம் சாலை, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, வடசேரி ஆறாட்டு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் வெள்ளமாக பாய்ந்தோடியது.
இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவா்கள் வாகனங்களை இயக்க முடியாமல் தள்ளிச் சென்றனா்.
மேகம் கருத்து இருள் சூழ்ந்திருந்ததால் சாலையில் சென்ற பெரும்பாலான வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே சென்றன.
இதே போல் மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, குளச்சல், மாதவாலயம், கன்னியாகுமரி, தக்கலை உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் இப்பகுதிகளில் வெப்பம் தணிந்து காணப்பட்டது.
No comments