காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கன்னியாகுமரி மண்டபத்தில் அமைந்துள்ள அஸ்தி கட்டடத்தில் அபூர்வ சூரிய ஒளி வெள்ளிக்கிழமை விழுந்தது...
காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கன்னியாகுமரி மண்டபத்தில் அமைந்துள்ள அஸ்தி கட்டடத்தில் அபூர்வ சூரிய ஒளி வெள்ளிக்கிழமை விழுந்தது.

காந்தியடிகளின் அஸ்தி 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி கன்னியாகுமரி கடலில் கரைக்கப்பட்டது. அஸ்தி கரைப்பதற்கு முன்பாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கடற்கரையில் வைக்கப்பட்டது. அந்த இடத்தில் 1956-ஆம் ஆண்டு அவருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் காந்தியடிகளின் பிறந்த நாளான அக். 2ஆம் தேதி சூரிய கதிர்கள் அங்குள்ள காந்தியின் அஸ்தி கட்டடத்தில் விழும்படி அமைக்கப்பட்டுள்ளது இம்மண்டபத்தின் சிறப்பம்சமாகும்.
நிகழாண்டு காந்தியடிகளின் ஜெயந்திவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைமுன்னிட்டு காந்தி அஸ்தி கட்டடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அஸ்தி கட்டடம் முன்பு காந்தியடிகளின் படம் வைக்கப்பட்டிருந்தது. நண்பகல் 12 மணிக்கு அஸ்தி கட்டடத்தில் சூரிய ஒளி விழுந்தது. அப்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். காந்தி மண்டப பொறுப்பாளர் ஜலால் ரகுபதி ராகவ ராஜாராம் என்ற காந்தீய பாடலை பாடினார்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக காந்தி மண்டபத்தினுள் குறைந்த அளவில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
முன்னதாக காந்தி மண்டபம் முன்பிருந்து நாகர்கோவில் வரையிலான போதை விழிப்புணர்வு ஜோதி ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
No comments