மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 45 போலீசாருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. குமரி மாவட்டத்தில் வெளிம...
மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 45 போலீசாருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது.

குமரி மாவட்டத்தில் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் மூலம் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை சாவடியில் இருந்த சுகாதாரத்துறை ஊழியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
தற்போது, காவல்த்துறை இன்ஸ்பெக்டருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் மணவாளக்குறிச்சியில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்தார்.
நேற்று முன்தினம் வடிவீஸ்வரம் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையத்தில் அவருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து மணவாளக்குறிச்சியில் உள்ள அவரது அலுவலகம் பூட்டப்பட்டது. தொடர்ந்து மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அவர் விசாரணை அதிகாரியாக சென்ற மண்டைக்காடு, வெள்ளிச்சந்தை காவல் நிலையங்களிலும், குளச்சல் காவல் நிலையத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
அவர் பரிசோதனைக்கு செல்லும்போது கோட்டாறு காவல் நிலையத்திலும் சிறுது நேரம் இருந்துள்ளார். இதனால் அங்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதற்கிடையே இன்ஸ்பெக்டர் விசாரணைக்காக சென்ற மண்டைக்காடு, வெள்ளிச்சந்தை மற்றும் மணவாளக்குறிச்சி காவல்நிலையங்களில் பைல்கள் மற்றும் புகார் மனுக்கள் இன்ஸ்பெக்டர் தொட்டு இருப்பதால், அந்த மனுக்கள் மற்றும் பைல்களை வாங்கி பராமரித்த போலீசாருக்கும் தொற்று இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் 3 காவல் நிலையங்களை சேர்ந்த 45 போலீசாருக்கு நேற்று சளி பரிசோதனை செய்யப்பட்டது. குருந்தன்கோடு, முட்டம் வட்டார மருத்துவ அலுவலர் பிரதீப்குமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். பரிசோதனை முடிவுகள் இன்று மதியம் வரும் என தெரிகிறது.
இந்த சம்பவம் குமரி போலீசார் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments