ராஜாக்கமங்கலம் அருகே முதியவர் சுத்தியலால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– கன்னியாகுமரி மாவட்டம் ர...
ராஜாக்கமங்கலம் அருகே முதியவர் சுத்தியலால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள வைராகுடியிருப்பு ஊரை சார்ந்தவர் ரகுராஜன்(58) இவர் எலக்ட்ரிஷன் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். அதில் ஒரு பெண்ணிற்கு திருமணம் ஆகிவிட்டது.
ரகுராஜனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இவர் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதால் இவரது மனைவி மற்றும் குழந்தைகள் கோபித்து விட்டு தம்மத்துகோணம் அடுத்து ஞானம் நகர் பகுதியில் தனியாக வசித்து வந்தார். ரகுராஜன் மட்டுமே வைராகுடியிருப்பு பகுதியில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் காலை, ரகுராஜன் வீட்டிற்கு அவரது சகோதரர் மின்மோட்டார் போடுவதற்காக வந்தார். அப்போது ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த ரகுராஜனை பார்த்து அவரது சகோதரர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினரை அழைத்து, ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன், ராஜாக்கமங்கலம் இன்ஸ்பெக்டர் மீனா, மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களையும் வரவழைத்து தடயங்கள் சேகரிக்கப்பட்டது. பின்பு ரகுராஜன் இறந்து கிடந்த அறையில் மின் வயர் பெட்டி அறுந்து கிடந்ததால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு ரத்த காயமடைந்து இறந்திருக்கலாம் என போலீசார் முதற்கட்ட விசாரணையில் சந்தேகித்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பக்கத்து வீட்டை சேர்ந்த தங்கராஜா மகன் ராஜா( 32) என்பவரின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவரை பிடித்து விசாரிக்கும் பொழுது அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.
விசாரணை முடிவில் கொலையைப் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
கொலை செய்யப்பட்ட ரகு ராஜனின் எதிர்வீட்டில் ராஜாவின் அண்ணன் வசித்துவருகிறார். ரகுராஜன் குடித்துவிட்டு ராஜாவின் சகோதரரின் குடும்பத்தை தகாத வார்த்தையில் திட்டி வந்தார். இதனை ராஜா பலமுறை கண்டித்தும் ரகுராஜன் கேட்கவில்லை. சம்பவத்தன்று மாலை ரகுராஜன் ராஜாவின் சகோதரர் குடும்பத்தினரை திட்டினார். ராஜா பலமுறை கண்டித்தும் கேட்காததால் அன்று இரவு அரிவாளுடன் வந்து ரகுராஜனை வெட்டினார். இதில் ரகுராஜன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். பின்பு ராஜா அங்கிருந்து சென்று விட்டார்.
அதன் பின்பு சிறிது நேரம் கழித்து வந்து ரகுராஜனை ராஜா பார்த்துள்ளார். அப்போது ரகுராஜன் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிகொண்டு இருந்திருக்கிறார். உடனே அருகில் கிடந்த சுத்தியலை எடுத்து ரகுராஜனின் தலையில் அடித்துள்ளார். இதில் ரகுராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். பின்பு யாருக்கும் தெரியாத வகையில் அங்கிருந்து சென்றுள்ளார் என்று போலீசார் தரப்பில் கூறினார்.
No comments