குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பாத்திமா தெருவை சேர்ந்தவர் ஜாண் ரிச்சர்ட். சவுதி அரேபியாவில் மீன்பிடி தொழில் செய்து ...
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பாத்திமா தெருவை சேர்ந்தவர் ஜாண் ரிச்சர்ட். சவுதி அரேபியாவில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சகாய சில்ஜா (வயது 28).
சிறுவன் ஜோகன்
இந்த தம்பதியினருக்கு ஜோகன் ரிஷி (வயது 4) என்ற மகனும், 2 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருந்த நிலையில், நேற்று (21-01-2022) மதியம் சுமார் 1:30 மணியளவில் வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த ஜோகன் ரிஷியை, சகாய சில்ஜா சாப்பிடுவதற்காக அழைக்க சென்றார்.
அப்போது சிறுவனை காணவில்லை. இதனால் பதற்றம் அடைந்த சகாய சில்ஜா அருகில் உள்ள உறவினர் வீடுகள் உள்பட அந்த பகுதி முழுவதும் தேடினார். சிறுவனை காணவில்லை என்ற தகவல் அறிந்ததும், அவரது உறவினர்களும் விரைந்து வந்து தேடினர்.
கொலையாளி பாத்திமா
பல மணிநேரம் கடியப்பட்டணம் ஊர் முழுவதும் தேடி பார்த்தனர். இருப்பினும் சிறுவன் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் சகாய சில்ஜா புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தகவல் அறிந்ததும், குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன், பயிற்சி டி.எஸ்.பி. சிந்து, இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அருள்பிரகாஷ் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேற்று இரவு முழுவதும் கடற்கரை பகுதியில் தேடினர்.
சிறுவனை கொலை செய்து வைத்திருந்த பீரோ
ஆனாலும் சிறுவன் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. காணாமல்போன சிறுவன் 1 பவுன் தங்க சங்கிலி, அரை பவுன் கை காப்பு (பிரைஸ் லெட்), வெள்ளியில் அரைஞாண் கயிறு ஆகியவை அணிந்திருந்தான்.
சிறுவன் மாயமானது குறித்து கடியப்பட்டணம் ஊரே சோகத்தில் மூழ்கி இருந்த நிலையில், பேரதிர்ச்சியாக சிறுவனை பற்றிய தகவல் கிடைத்தது. பக்கத்து வீட்டு பெண்ணே நகைக்காக சிறுவன் ஜோகன் ரிஷியை கடத்தி, கொலை செய்தது தெரியவந்தது.
ஊரே சிறுவனை தேடும்போது, எதுவும் தெரியாத அப்பாவி போல் இருந்து வந்த பக்கத்து வீட்டு பெண் பாத்திமா, தன் வீட்டு பீரோவில் சிறுவனை கை, கால்களை கட்டி, வாயை துணி வைத்து அமுக்கி கொலை செய்து வைத்திருந்தாள்.
சிறுவன் ஜோகன் ரிஷியை கொலை செய்து, அவன் அணிந்திருந்த நகைகளை கழற்றி எடுத்து, அதனை தனியார் நிறுவனத்தில் அடகு வைத்ததாக கூறப்படுகிறது.
இதில் ஏற்பட்ட சந்தேகத்தில் அடிப்படையில் தீவிர விசாரணையில் பக்கத்துவீட்டு பாத்திமா சிறுவனை மறைத்து வைத்தது தெரியவந்தது. தொடர்ந்து பாத்திமாவின் வீட்டை சோதனை செய்ய போது, அவர் சிறுவனை கொலை செய்து நகைகளை எடுத்ததும், சிறுவனை பீரோவில் கொன்று வைத்துள்ளதும் தெரியவந்ததாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து, அந்த பெண் கைது செய்யப்பட்டாள். ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலைகாரிக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
காணாமல் போன சிறுவன் கொலையுண்ட தகவல் அறிந்ததும், உறவினர்களும், ஊர் மக்களும் கண்ணீர் விட்டு அழுதனர். ஊரே மிகவும் சோக மையமாக காணப்படுகிறது. சிறுவன் உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து பாத்திமாவை கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் பாத்திமா வீட்டை அடித்து நொறுக்கி சூரையாடினார்கள். சிறுவன் பிணமாக கிடந்த பீரோவை சுக்குநூறாக உடைத்தனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொலை செய்த பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.
















No comments